கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன சிலைகள் தொடர்பாக பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தன்டன்தோட்டம் என்ற கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான சோழர்காலத்தில் கட்டப்பட்ட நடனபுரிஷ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 1971ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி, கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு, 2 கிருஷ்ண காளிங்க நர்த்தனம் சிலைகள், அகஸ்தியர், அய்யனார், அம்மன் ஆகிய 60 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புடைய 5 சிலைகள் களவாடப்பட்டன.


இதுகுறித்து, அப்போது, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையருக்கும், காவல்துறையினருக்கும் தெரிந்திருந்தும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதுபற்றிய தகவல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்தது. உடனடியாக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் போலீஸ் படையுடன் சம்மந்தப்பட்ட கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


திருட்டு போன சிலைகளில் நடராஜர் சிலை இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


7 சிலைகள் திருட்டு போன பிறகு இந்த கோவிலில் மீதமுள்ள 17 சிலைகள் தற்போது அதேபகுதியில் உப்பிலியப்பன் கோவிலில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி விசாரணை நடத்தி தேடி வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.