சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் மூன்றாவது வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாத காலத்தில், சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் கிடைக்கும் மூன்றாவது வெற்றி இந்தத் தீர்ப்பு என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாத காலத்தில், சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் கிடைக்கும் மூன்றாவது வெற்றி இந்தத் தீர்ப்பு என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமை அடிப்படையிலான ஒதுக்கீடு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசியதாவது:
''2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்று வந்த சூழ்நிலையில், இந்த நிலை மாற்றப்பட வேண்டுமென்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.
அதன் அடிப்படையில், அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளித்திட டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அளித்த அறிக்கையின்படி, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் 7.5 சதவீதம் இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய, அரசால் 2021ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் “இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம்’’ இயற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையிலான பொறியியல் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, “அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவர்களுடைய, அதாவது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கு ஆகக்கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக் கொள்ளும்’’ என்ற அறிவிப்பினை நான் வெளியிட்டேன்.
அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தவகையில், படிப்புக் கட்டணம் வழங்குவதற்காக 45 கோடியே 61 இலட்சம் ரூபாயும், விடுதிக் கட்டணத்திற்காக 25 கோடியே 32 இலட்சம் ரூபாயும், போக்குவரத்துக் கட்டணத்திற்காக, 3 கோடியே 35 இலட்சம் ரூபாயும், ஆகமொத்தம் 74 கோடியே 28 இலட்சம் ரூபாய் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தக் கல்வியாண்டில், 7 ஆயிரத்து 876 மாணவர்கள் சேர்க்கை ஆணை பெற்றிருக்கிறார்கள். 17-2-2022 வரை 6,100 மாணவர்களுக்கான கட்டணமாக 38 கோடியே 31 இலட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சூழ்நிலையில், 7.5 சதவீத இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையிலான அரசு ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு, இருதரப்பு வாதுரைகளும் முடிவுற்று, இன்று நமக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த மாமன்ற உறுப்பினர்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மேலும் படிக்க | சொத்து வரி உயர்வு ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தரவுகளின் அடிப்படையிலும், முறையான கலந்தாலோசனை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட முன்னுரிமை அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு உயர் நீதிமன்றம் தந்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாத காலத்தில், சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் கிடைக்கும் மூன்றாவது வெற்றி இந்தத் தீர்ப்பு என்பதைப் பெருமையுடன் பதிவு செய்கிறேன்.
சமூக நீதியை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நிலைநாட்டி, நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை தமிழகம் தொடர்ந்து செய்திடும்.
திராவிட மாடல் ஆட்சி, அதற்காக அயராது உழைத்திடும்''.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மேலும் படிக்க | தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க 12 பேர் கொண்ட குழு அமைப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G