தமிழ்நாட்டில் ஆரணி நகரில் சிலிண்டர் வெடித்து மூவர் உயிரிழந்த விபத்து தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தி பின்வருமாறு:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் சிறுவன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு  இருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனை அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆரணி புதுகாமூர் கமண்டல நாகநதி பகுதியைச் சேர்ந்த மலர் வணிகர் முத்தாபாய் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை கசிவு காரணமாக இன்று அதிகாலை வெடித்து சிதறியது. இந்த விபத்தில் முத்தாபாயின் வீடும், அருகிலுள்ள மேலும் இரு வீடுகளும் இடிந்து விழுந்தன. இதில் காமாட்சி என்பவரின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த காமாட்சி, அவரது 8 வயது மகன் ஹேம்நாத் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தவிர மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன.


சமையல் எரிவாயு உருளைகள் நவீன காலத்தில், நமது வசதியான வாழ்க்கைக்கு அவசியமானவை. அதே நேரத்தில் அவை நமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுக்கு இணையான ஆபத்து நிறைந்தவை. மிகவும் பாதுகாப்பாக கையாளும் வரை நமக்கு உதவியாக இருக்கும் சமையல் எரிவாயு உருளைகள், பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தால் நமது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானவை. இதை உணராதன் விளைவு தான் ஆரணியில் ஏற்பட்ட கொடுமையான விபத்து ஆகும். சமையல் எரிவாயு உருளைகளை கையாளும் முறைகள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிடும் விழிப்புணர்வு செய்திகளை மக்கள் உள்வாங்கிக் கொண்டு எச்சரிக்கையுடன் வாழும்படி வேண்டுகிறேன்.


ஆரணி எரிவாயு உருளை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் முழுமையான உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என விழைகிறேன். உயிரிழந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதமும் நிதி உதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி சமையல் எரிவாயு உருளை வெடித்து தரைமட்டமான வீடுகளை கட்டவும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR