தமிழகத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓராண்டாக குறைப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 


இந்நிலையில், தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தின் கால அவகாசம் 5 ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. காலவாதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுபிக்க தவறினால் மீண்டும் விண்ணப்பித்து புதிய உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாலை பாதுகாப்பு மசோதாவுக்கு பிறகு இந்த நடைமுறை தற்போது தமிழகத்திலும் வந்திருக்கிறது. இதேபோன்று பிற மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.தமிழகத்தைப் பொருத்தவரை தற்போது இந்த மாதத்தில் இருந்தே இந்த நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது. ஒரு நபர் ஓட்டுநர் உரிமம் பெற்றால் அதற்கான கால அவகாசம் 20 ஆண்டுகள். பின்னர் 5 ஆண்டுகளுக்குள் அதை புதுப்பித்துக் கொள்ளலாம். இனிமேல் காலாவதி ஆகி 1 ஆண்டுக்குள் புதுப்பிக்க வேண்டும் இல்லையென்றால் மீண்டும் புதிய ஓட்டுனர் உரிமம்  பெற வேண்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.