புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், ஏராளமான கட்சி தொண்டர்களுடன் பேரணியாக வந்த மு.க.ஸ்டாலின், மாவட்ட பஸ் ஸ்டாண்ட் முன் போராட்டம் நடத்தினார்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதவராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்பு போராட்டத்தில், அதிமுக, பாஜக, பாமக, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகிய சங்கங்களும் தங்களது முழு ஆதரவை அளித்துள்ளன. இதனால், அனைத்து கடைகளும் மூடப்படும் என தெரிகிறது.
மேலும் புதுவையில் ஆளும் கட்சியான காங்கிரசும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளது. இதன்படி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. புதுவையில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.
புதுவை அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள், டெம்போக்கள், லாரிகளும் ஓடவில்லை. ஒரு சில தனியார் கல்லூரி பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நகரெங்கும் போலீசார் ரோந்து சென்றனர். முக்கிய சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.