Tamil Nadu Latest News: பாஜகவின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரான வானதி ஸ்ரீனிவாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2019 மக்களவைத் தேர்தல் போல மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். மத்திய நிதி அமைச்சருக்கு பதில் அளிக்கும் சாதுரியம் இல்லாததால்தான், அவரை ஜாதி ரீதியாக திமுக இழிவுப்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் நடந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்காத போதும், மக்களுக்கு கிடைத்தது அனைத்தும் ஸ்டாலின் கொடுத்தது' என்று பேசியிருக்கிறார்.


திமுகவின் பிரிவினை சித்தாந்தம்...


அது மட்டுமல்லாது, 'சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசிடம் ரூ. 37 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால், தேர்தல் வரப் போகிறதே, தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்க வேண்டுமே என்று கொஞ்சம் கூட பயம் இல்லாமல் மத்திய அரசும், மத்திய நிதியமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள். இதை கேட்டால், உங்களிடம் சாதுர்யம் இருந்தால் சாதித்துக் கொள்ளலாமே என நிதியமைச்சர் ஆணவமாக பேட்டி அளித்திருக்கிறார்' என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.


மேலும் படிக்க | சென்னையை உலுக்கிய ஆணவக் கொலை... மனதை அதிர வைக்கும் தகவல்கள்!


முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே, மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என்று பேசாமல், ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார்கள். அன்று தொடங்கியதை இன்று வரை திமுக தொடர்ந்து செய்து வருகிறது. 


மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும்


2047இல் பாரத நாட்டை பொருளாதாரத்தில் உலகின் முதல் நாடாக மாற்றும் லட்சிய இலக்குடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். மாநிலங்கள் முன்னேறாமல் பாரதத்தின் வளர்ச்சி என்பது சாத்தியம் அல்ல. எனவே, பாஜக ஆளும் மாநிலங்கள், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மாநிலங்களையும் சமமாகவே மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது. 'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் ' பாஜக அரசின் தாரக மந்திரம்.


நிதி ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின்படியே, அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது. பேரிடர் மேலாண்மை விதிகளின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏற்கனவே விடுவித்துள்ளது. அதாவது ரூ. 1,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளை ஆராய வந்த மத்தியக்குழு அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும்.


திமுகவின் சாதுர்யம் இதுதான்...


"நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் மறு வரையறை செய்யும்போது பாதிப்பு ஏற்படும் என்று கருதும் மாநிலங்கள், அவர்களின் கருத்துகளை ஆதாரங்களுடன் முன் வைத்தால் பாதிப்புகளைத் தடுக்க முடியும்" என்றுதான் மத்திய நிதியமைச்சர் கூறினார். அதாவது தமிழ்நாட்டிற்கு உதவும் வகையிலேயே அப்படியொரு கருத்தை தெரிவித்தார். அதைத்தான் 'சாதுர்யம் இருந்தால் சாதிக்கலாம்' என கூறினார். 


இதை வெள்ள நிவாரணத்துடன் தொடர்புபடுத்தி  முதலமைச்சர் ஸ்டாலின் திசைதிருப்புகிறார். குடும்ப ஆட்சியை நிலை நிறுத்துவதிலும், விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதிலும் திமுகவுக்கு உள்ள சாதுர்யம் வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மைதான்.


ஜாதி ரீதியிலான தாக்குதல்


மத்திய நிதியமைச்சருக்கு பதிலளிக்கும் சாதுர்யம் இல்லாததால்தான், அவரை ஜாதி ரீதியாக நாடாளுமன்றத்திலேயே திமுக இழிவுபடுத்தியது. ஊழல், குடும்ப ஆட்சியின் அவலங்களால் தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதை திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப திரும்ப அவதூறு பரப்பி வருகிறார். 


இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் மக்கள் அனைத்தையும் பார்க்கிறார்கள். படிக்கிறார்கள். உண்மை அவர்களுக்குத் தெரியும். எனவே, இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் போல, இப்போது மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சில் வெளிப்படுகிறது. தமிழக மக்கள் என்றும் தேசியத்தின் பக்கம் தான் என்பது வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.


மேலும் படிக்க | கன்னியாகுமரி எம்.பி. சீட் யாருக்கு? விஜயதரணி பாஜகவில் இணைந்ததால் களேபரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ