முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு உதவுவதற்காக நன்கொடை வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு உதவுவதற்காக நன்கொடை வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தற்போது நமது மாநிலத்தில் 1,52,389 பேர் இத்தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 31,410 பேர் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த அலை நமது மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பின்மீதும், மக்கள் மீதும், கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத இந்தச் சவாலை சமாளிக்கவும், மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல். அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் தடையின்றி கிடைக்கச் செய்தல், ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்துதல், கூடுதல் மருத்துவ மற்றும் பிற பணியாளர்களைப் பணி அமர்த்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும் நிலையில் இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே. அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இத்தகைய இடர்ப்பாடுகளே மனித நேயத்தை வெளிப்படுத்துவதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன. நாம் அனைவரும் ஒன்றுகூடி இப்போரை வெல்வதற்கான நேரம் இது.
இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்்.டி.பி.சி.ஆர்.
கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR