போட்டித் தேர்வுகளை தமிழில் நடத்த மறுப்பது துரோகம் -இராமதாசு!
தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகளை தமிழில் நடத்த மறுப்பது துரோகம் என பாமக நிறுவனர் இராமதாசு அவர்கள் தெரிவிதுள்ளார்.
தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகளை தமிழில் நடத்த மறுப்பது துரோகம் என பாமக நிறுவனர் இராமதாசு அவர்கள் தெரிவிதுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"தமிழகக் காவல்துறையின் கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழக அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழியில் வினாத்தாள்களை வழங்க மறுப்பது தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இது கண்டிக்கத்தக்கது.
தமிழகக் காவல்துறையின் கைரேகைப் பிரிவுக்கு 202 சார்பு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுப்படவுள்ளனர். இதற்கான ஆள்தேர்வுக்கு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு 28.09.2018 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெறும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. போட்டித் தேர்வுகள் எந்த மொழியில் நடத்தப்படும் என்று தேர்வர்கள் எழுப்பிய வினாவுக்கு விடையளித்துள்ள சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும், தமிழில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறியிருக்கிறது. தேர்வு வாரியத்தின் இம்முடிவு தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தமிழகக் காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவுக்கு 309 சார்பு ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஜூலை 11-ஆம் தேதி வெளியிடப்பட்டு கடந்த 30.09.2018 அன்று போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான விடைத்தாள்களும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தன. இதனால். கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர்கள் பதவிக்கான போட்டித் தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்பது உறுதியாகியிருக்கிறது. 2015-ஆம் ஆண்டு வரை காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு, கைரேகைப் பிரிவுக்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான போட்டித்தேர்வுகள் தமிழில் நடத்தப் பட்டு வந்தன. அந்த நடைமுறையை கைவிட்டு ஆங்கிலத்தில் மட்டும் போட்டித் தேர்வுகளை நடத்தும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.
காவல்துறை சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்பட்டால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். ஆங்கில வழியில் படித்த, தமிழகத்தில் வாழும் பிற மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் வழியில் படித்த, தமிழ் பேசும் பட்டதாரிகள் இந்தப் பதவிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு செய்யப்படுகிறதோ என்ற ஐயமும் எழுகிறது.
கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதாகும். இதற்கான காரணம் தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசும் மக்களிடையே பணியாற்றும் சார்பு ஆய்வாளர்கள் தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருந்தால் தான் அவர்களால் சிறப்பாக பணியாற்ற முடியும் என்பது தான். அவ்வாறு இருக்கும் போது தமிழில் தேர்வு எழுதும் உரிமையை பறிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எந்த ஒரு மாநிலத்திலும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை அந்த மாநில மொழியில் எழுதுவது அம்மாநில மொழி படித்த மாணவர்களின் அடிப்படை உரிமை ஆகும். தேசிய அளவில் நடத்தப்படும் பல போட்டித் தேர்வுகளை தமிழிலும் எழுத முடியும். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் தமிழில் எழுத முடியும். கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளும் இதற்கு முன்பு வரை தமிழ் மொழியில் நடத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது இப்போது மட்டும் அந்த வாய்ப்பும், உரிமையும் மறுக்கப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதை திட்டமிட்ட சதியாகவே பார்க்கத் தோன்றுகிறது.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ் மொழியிலும் நடத்தப்பட்டது. அதேபோல் ஐ.ஐ.டிக்கான நுழைவுத் தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு கோரி வருகிறது. ஒருபுறம் தேசிய அளவிலான தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழக அரசு, தமிழகத்தில் நடத்தப்படும் போட்டித்தேர்வை தமிழில் நடத்த மறுப்பது முரண்பாடுகளின் உச்சமாகும்.
கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இன்னொரு அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணிகளில் 20% இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால், கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் நியமனத்தில் இந்த ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எதிரான சதியை இது உறுதி செய்கிறது.
தமிழக அரசு தமிழில் படித்தவர்களின் உரிமைகளை பறிப்பதை ஏற்க முடியாது. எனவே, கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வை தமிழ் மொழியில் நடத்தவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.