தமிழகம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தெற்காசியாவுக்கே முன்மாதிரி: ஆளுநர் புகழாரம்
தமிழக அரசின் பல முக்கிய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் எடுத்துக்காட்டிய ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இனிதே தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், கலைவாணர் அரங்கத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி-யின் உரையுடன் தொடங்கியது.
இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவைக் கூட்டத்தை தொடக்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பல முக்கிய விஷயங்களைப் பற்றி பேசினார்.
“வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு !”
என பாரதியாரின் வரியுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தன்னுடைய முதல் உரையை நிறைவு செய்தார் ஆளுநர்.
தமிழக ஆளுநர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- இலங்கை தமிழர்களின் நலனுக்காக அரசு திட்டங்களை வகுக்கிறது. வீடுகளை கட்டித் தந்திருக்கிறது.
- இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களையும், 75 படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.
- மீனவர்கள் கைதை தடுக்க அனைத்து படகுகளுக்கும் டிரான்ஸ்பாண்டர்களை கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.
- தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
- மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
- முல்லை பெரியாறில் முழு கொள்ளளவை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
- அண்டை மாநிலங்களுடன் நட்புறவு தொடரும். அதே நேரத்தில் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது.
- ஊரக உள்ளாட்சித் தேர்தலை அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதில் அரசு முனைப்புடன் இருக்கிறது.
- மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறுகுறு தொழில்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
- சென்னையை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சிங்கார சென்னை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் சென்னையின் தரம் மேம்படுத்தப்படுகிறது.
ALSO READ | தமிழகத்தில் மீண்டும் மினி லாக்டவுன்? புதன்கிழமை அறிவிப்பா?
- சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மூன்று மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.
- பெண்களுக்கான விலையில்லா பேருந்து பயணத்தை அரசு அறிமுகப்படுத்தியது.
- இதனால் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40%இல் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- பெரியார் மற்றும் கலைஞரின் கனவை நினைவாக்கும் விதமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக்கப் பட்டிருக்கிறார்கள்.
- அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்த சிறப்புத் திட்டங்களை அரசு தீட்டி வருகிறது.
- ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்டவை நடைமுறைப் படுத்தப் படுகின்றன.
- பல கோவில் நிலங்களை மீட்ட அரசுக்கு பாராட்டு.
- கோவிட் இரண்டாம் அலை உள்ளிட்ட தடைகளை சந்தித்தாலும் அரசு அயராது உழைத்து பல சாதனைகளை செய்துள்ளது. தமிழ்நாடு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் தெற்கு ஆசியாவுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது.
இந்த வகையில், தமிழக அரசின் பல முக்கிய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் எடுத்துக்காட்டிய ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இனிதே தொடங்கியது.
ALSO READ | பாரதி பாடலுடன் ஆளுநர் உரை: அதிமுக, விசிக வெளி நடப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR