Edappadi Palanisamy Press Meet In Vellore: வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த ஜூலை 11ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மரணத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்க்காக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காட்பாடி விருதம்பட்டு காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்க்கு சென்று ஜெகன்நாதன் ரெட்டியின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்காக சென்னையில் இருந்து சதாப்தி இரயில் மூலம் எடப்பாடி பழனிசாமி காட்பாடி ரயில் நிலையம் வந்தடைந்தார். சேகர் ரெட்டி வீட்டுக்குச் செல்லும் முன்னதாக ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சென்னை அருகே ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 


'என்கவுன்டரில் சந்தேகம் உள்ளது'


அதற்கு அவர்,"ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட திருவேங்கடம் என்ற நபர் சரண் அடைந்துள்ளார். அப்படி சரணடைந்தவரை வேக வேகமாக அதிகாலையிலேயே அழைத்து சென்றதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இவை செய்தியின் வாயிலாக நான் அறிந்து கொண்டது. 



மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!


ஏன் அவசர அவசரமாக அவரை அழைத்துச் சென்றீர்கள், அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்து சென்றதாக கூறுகிறார்கள். ஒரு கொலை குற்றவாளியை கைவிலங்கு போட்டுதான் அழைத்துச் செல்ல வேண்டும் என விதி இருக்கிறது. அப்படி இருக்கும்போது பாதுகாப்போடு தான் அழைத்து சென்றிருக்க வேண்டும். அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றும் போது இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்... இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக தெரிகிறது.


ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளி இல்லை என தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது மேலும் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது என்பது தான் என்னுடைய கருத்து" என கூறினார்.


பொன்முடிக்கு இபிஎஸ் பதிலடி!


விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து அவரிடம் கேட்டபோது," விக்கிரவாண்டி தேர்தலை பொறுத்தவரை, அது ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. இதனால்தான் அதிமுக அதில் போட்டியிடவில்லை. தற்போது பணபலம், அதிகார பலத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது" என்றார்.


மேலும் தோல்வி பயம் காரணமாகத்தான் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததாக பொன்முடி கூறி இருந்தது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய சொந்த தொகுதியான திருக்கோவிலூரில் அதிமுகதான் அதிகமான வாக்கு வாங்கி உள்ளது" என பதிலடி கொடுத்தார்.


'காவேரி விவகாரம்: வாய்திறக்காத திமுக'


தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி,"உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ஆண்டுதோறும் கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. குறிப்பாக தமிழக விவசாயிகளைப், பற்றியும் தமிழ்நாட்டு மக்களை பற்றியும் கவலைப்படாத அரசாக திமுக அரசு உள்ளது. 


அவரை பொறுத்த வரைக்கும் கூட்டணி தான் முக்கியம், அதிகாரம் தான் முக்கியம். இந்தியா கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. நமக்கு ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டிய நீரைத்தான் நாம் கேட்கிறோம், ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியின் முதலமைச்சர் விவசாயிகள் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை இல்லாமல் எவ்வித குரலும் கொடுக்கவில்லை. ஆனால் நான் அறிக்கை மூலமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளேன்" என்றார். 


மேலும் படிக்க | விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு முதலமைச்சர் கூறிய குட் நியூஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ