சர்ச்சையில் சிக்கிய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு!
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மறு தேர்வு நடத்த தேவை இல்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது!
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மறு தேர்வு நடத்த தேவை இல்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது!
முன்னதாக கடந்த 27-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கு முன்பதிவு செய்த 1, 85, 466 பேரில் 1, 47, 580 பேர் மட்டுமே தேர்வை எழுதி உள்ளதாகவும் 37, 886 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்களுக்கு 3 மணி நேரம் வழங்கப்பட்டு தேர்வுகள் நல்ல முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆவடி உள்ளிட்ட ஒரு சில தேர்வு மையங்களில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும், அது உடனுக்குடன் சரி செய்யப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.
மேலும் அனைத்து இடங்களிலும் தேர்வுகள் சரியான முறையில் நடந்து இருப்பதால் மறுதேர்வு நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.
முன்னதாக., முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையங்கள் தொலைதூர மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகாவும், இதன் காரணமாகவே தேர்வாளர்கள் தேர்வு எழுத வரவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தேர்வாளர்களுக்கு தேர்வு மையங்களுக்கான ஆப்சன்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் முதலில் சொந்த மாவட்டங்களையும் பின்னர் பக்கத்தில் உள்ள மாவட்டங்களையும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்திருந்தனர்.
விண்ணப்ப தேதி முடிந்து, தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை டவுன் லோடு செய்த போது விண்ணப்பதாரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் விண்ணப்பதாரர்களுக்கு மிகவும் தொலைதூர மாவட்டங்களை தேர்வு மையமாக ஒதுக்கி இருந்தது தேர்வு வாரியம். உதாரணமாக திண்டுக்கல்லை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பொதுவாக திண்டுக்கல், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் என தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து விண்ணப்பிப்பர். ஆனால் திண்டுக்கல் விண்ணப்பதாரர்களுக்கு சென்னை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் பல தொலை தூர மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பெண் விண்ணப்பதாரர்கள் பலரும் தேர்வே எழுதாவிட்டாலும் பரவாயில்லை என்கிற விரக்திக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.