அமமுக பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் தேர்வு... சசிகலாவுக்காக காத்திருக்கும் பதவி
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: இன்று சென்னையில் உள்ள அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.சரஸ்வதி, "இன்று நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில் அ.ம.மு.க. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரன் அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் எனத் தெரிவித்தார். மேலும் தற்போது பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா விடுதலையான பிறகு கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அ.ம.மு.க.வை கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால் கட்சி பதிவு செய்யப்படததால், அவர்களுக்கு பொது சின்னம் (குக்கர் சின்னம்) ஒதுக்க முடியாது என்றும், தனித்தனி சின்னம் மட்டும் ஒதுக்கமுடியும் எனக்கூறி பரிசுபெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
அடுத்த மாதம் தமிழகத்தில் 4 சட்டமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், கட்சியை பதிவு செய்ய முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது.