மே 29-ம் தேதி வரை தினகரனுக்கு காவல் நீட்டிப்பு!
இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரது நீதிமன்ற காவல் மே 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். மேலும் கடந்த 25-ம் தேதி சுகேஷ் வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இருவரின் போலீஸ் காவல் முடிந்த நிலையில் டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் இருவரும் காணொலிக் காட்சி மூலம் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரது காவலையும் வரும் 29-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருவரின் குரல் மாதிரியைப் பதிவு செய்யக் கோரும் மனு மே 18-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. குரல் மாதிரியைப் பதிவு செய்ய சுகேஷ் சந்திரசேகர் டெல்லி நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.