அமமுக கட்சிக்கு நிலையான சின்னம் கிடைத்த பின்னரே தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளாதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் பணபட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஜூலை 11 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜூலை18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூலை 19 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 22 ஆம் தேதியாகும்.


இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பல்வேறு அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றது. இதை தொடர்ந்து, வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; கட்சியைப் பதிவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், அந்த பணிகள் நிறைவு பெற்ற பின்னர், தேர்தலில் போட்டியிடலாம் என முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட வேண்டாம் என்பதால், வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் தினகரன் விளக்கம் அளித்தார். 
 
மேலும், தோல்வி அடைந்ததால் பயந்து விட்டோம் என சிலர் கூறுவர். சொல்கின்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள் என கருத்து தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொண்டர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் எனவும். சுயநலத்தோடு வேறு கட்சிக்கு சென்றவர்களால் இயக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.