`நான் கத்தினேன், அவன் இளித்தான்` - இரவில் சென்னை மாணவிக்கு நேர்ந்த கொடுமை - ஆட்டோ ஓட்டுநர் கைது
சென்னை அருகே தன்னை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைதளங்களில் மாணவி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் குற்றஞ்சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.
சென்னை தனியார் நிறுவனத்தில் ஊடகவியல் பயிலும் மாணவி ஒருவர், தான் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நேற்றிரவு (செப். 25) சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து தனது தோழியுடன் சோழிங்கநல்லூரில் உள்ள ஹோட்டலுக்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்க முயன்றபோது, பல மணிநேரமாக தான் அலைக்கழிக்கப்பட்டதாகவும், தனது புகாரை காவல் துறையினர் அலட்சியப்படுத்தியதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் ட்விட்டரில் வரிசையாக பல ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
அதில்,"சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நானும், எனது தோழியும் தங்கியுள்ளோம். நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அங்கு ஊபர் ஆட்டோ மூலம் வந்தோம். ஹோட்டலுக்கு வந்து இறங்கியபின், எனது தோழி ஆட்டோ ஓட்டுநருக்கு ஆன்லைனில் பணம் செலுத்திக்கொண்டிருந்தார்.
அப்போது, நான் ஆட்டோவில் இருந்து இறங்க முற்பட்டபோது, ஆட்டோ ஓட்டுநர் என்னை பாலியல் ரீதியாக சீண்டினார். அதிர்ச்சியடைந்த நான் சத்தமாக கத்தி, அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். அதற்குள் அவர் தப்பிக்க முயல எனது தோழியும், நானும் சேர்ந்து அவரை பிடிக்க முயற்சித்தோம். ஆனால், அவர் எங்களிடம் இருந்து தப்பிவிட்டார். உடனடியாக நாங்கள் போலீசாரை தொடர்புகொண்டோம். ஆனால், எந்த பதிலும் இல்லை" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஜயகுமார் ஐபிஎஸ் ஆகியோரை ட்வீட்டில் டேக் செய்துள்ளார்.
தொடர்ந்து,"பின்னர், புகார் அளித்து அரைமணி நேரம் கழித்து, இன்ஸ்பெக்டரும் மற்றொருவரும் ஹோட்டலுக்கு விசாரணைக்காக வந்தனர். மேலும், காலையில் வழக்குப்பதிவு செய்வதாகவும், அதுவரை காத்திருக்கும்படியும் என்னிடம் கூறினார். அவர்களுடன் மகளிர் போலீசார் வரவில்லை. மகளிர் போலீசார் எங்கே என கேட்டதற்கு, அரசின் உத்தரவுப்படி இந்த நேரத்தில் காவல் நிலையத்தில் பெண் போலீசார் இல்லை என பதிலளித்தார்.
காவல் நிலையம் வந்து புகார் அளிக்க அவர் எங்களை அனுமதிக்கவில்லை. இருப்பினும், இரண்டு ஹோட்டல் பணியாளர்களுடன் நாங்கள் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு சென்றோம். அப்போது அங்கிருந்த போலீசாரும், என்னை காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. கேட்டதற்கு இரவில் பெண்களுக்கு அனுமதியில்லை என கூறினார்.
அதைத் தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு வெளியே நான் புகாரை எழுதிக்கொடுத்தேன். ஒரு A4 தாளில்தான் எனது புகாரை எழுதிக்கொடுத்தேன். வழக்கமாக, பிரச்சனையை மறைக்கவோ அல்லது வேலைப்பளுவை குறைக்கவோதான், FIR ஆக இல்லாமல் இதுபோன்று A4 தாளில் புகார்கள் எழுதி வாங்கப்படும். பின்னர், காலை 9 மணியளவில் மகளிர் போலீசாரை சென்று சந்திக்கும்படி என்னிடம் கூறினார். தற்போது, (இன்று காலை) நான் ஆன்லைனில் FIR-ஐ பதிவுசெய்துள்ளேன்" என கூறியிருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண், அந்த ஆட்டோ ஓட்டுநர் பெயர் உள்பட அனைத்து விவரங்களையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இது மிக கொடுமையானது என்றும், தன்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியேவர முடியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி,"நான் அவனை பார்த்து கத்தும்போது, அவன் என்னை நோக்கி சிரிக்கும் அளவிற்கு துணிச்சலாக இருந்தான். அவனது முகத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். அந்த சம்பவம் தாம்பரம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததால், புகார் தாம்பரம் காவல் துறைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவரை தேடி வருவதாகவும் முதல்கட்டமாக, தாம்பரம் போலீசார் ட்விட்டரில் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, ஊபர் நிறுவனமும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆட்டோ பயணம் குறித்த விவரங்களை கேட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் தனக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், குற்றவாளியின் வீட்டு முகவரி உள்ளிட்ட பல தகவல்களை அவர்கள் திரட்டியுள்ளதாகவும் கூறி காவல்துறையினரை பாதிக்கப்பட்ட பெண் பாராட்டினார். இருப்பினும், குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், இன்று (செப். 26) இரவு 8.30 மணியளவில் குற்றஞ்சாட்டப்பட்டவர் பிடிப்பட்டதாகவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தாம்பரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | பசங்களுக்கும் பாதுகாப்பில்லை... 12 வயது சிறுவனை கூட்டு பாலியல் வன்புணர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ