திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சிறப்பு பொதுக்கூட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் நேற்று உதயநிதி பிறந்தநாள் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூட்டத்திற்கு பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் திரண்டுவந்தனர். மேலும் மோனிகா, தமயந்தி என்ற இரண்டு சிறுமிகள் மேடையில் லியோனிக்கும், கவிச்சுடர் கவிதைப்பித்தனுக்கும் பொன்னாடை போர்த்தியதும், மீண்டும் லியோனி அந்த சிறுமிகளுக்கு பொன்னாடை போர்த்தியதும் பலரது கவனத்தை ஈர்த்தது. 


கூட்டத்தில் பேசிய லியோனி, “புதுக்கோட்டை மாவட்டம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் பெண்கள் படிக்கக்கூடாது என்ற நிலை தீவிரமாக இருந்த காலத்திலேயே இதே மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி ரெட்டிதான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரானார். இப்படி ஏகப்பட்ட சிறப்புகளை கொண்டது புதுக்கோட்டை மாவட்டம். தற்போது கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கையில் நான் கூட்டத்தில் பேசப்போகிறேனா இல்லை மாநாட்டில் பேசப்போகிறேனா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது” என்றார்.



இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசுகையில், “இளைஞர்களை மேய்ப்பது கடினம். அதனால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்தார். சினிமாவில் பெரியவர் என்றால் நடிகவேள் எம்.ஆர்.ராதா, சின்னவர் என்றால் எம்ஜிஆர். எம்ஜிஆர் திரைப்படங்களிலும், அரசியலிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர். அதேபோல் தற்போது சின்னவர் உதயநிதி ஸ்டாலினும் அரசியலிலும், திரைப்படங்களிலும் பெரும் மாற்றத்தை உருவாக்குவார். அவரது படங்களில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.



ஒரு செங்கலை வைத்து தேர்தல் பரப்புரையை சிறப்பாக செய்தவர் உதயநிதி. தேர்தல் சமயத்தில் அவருக்காக பிரசாரம் செய்ய வேண்டுமென என்னிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். அதன்படி நானும் பிரசாரம் செய்துவிட்டு வந்தேன். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு என்னை தொலைபேசியில் அழைத்த அவர் வீட்டில் எப்போது இருப்பீர்கள் என கேட்டு நேரடியாகவே வந்து எனக்கு நன்றி தெரிவித்தார். அவர் நினைத்திருந்தால் தொலைபேசியிலேயே எனக்கு நன்றியை தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதுதான் அவரது பண்பு.


இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மிகத்தீவிரமாக செய்தவர் உதயநிதி ஸ்டாலின். அடுத்து நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் திமுக 40க்கு 40 என்று வெல்லும்” என்றார்.



முன்னதாக, பொன்னாடை போர்த்திய சிறுமிகளின் தந்தையிடம் அதுகுறித்து கேட்டபோது, “திமுகவில்தான் பெண்களுக்கான முக்கியத்துவம் இருக்கிறது. நான் ஒரு காங்கிரஸ்காரன். ஆனால் எனது மகள்கள் திமுகவில் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதனால்தான் அவர்களை திமுகவில் ஐக்கியமாக்கும் விதமாக இந்த மேடையில் அவர்களை பொன்னாடை போர்த்த வைத்தேன்” என்றார்.


மேலும் படிக்க | பிடிஆர் சிறப்பாக செயல்படுகிறார்! அமைச்சரை புகழ்ந்த மற்றொரு அமைச்சர்!


இந்தக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கவிச்சுடர் கவிதைப்பித்தன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன் மற்றும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ