சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், பல்வேறு துறையில் பல புதிய அறிவிப்புகள்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பள்ளிக்கல்வி ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பள்ளிக்கல்வி ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த வகையில் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தொகுப்பு கீழே அளிக்கப்பட்டுள்ளது
---கூட்டுறவு துறை---
ரூ.9.66 கோடியில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் ரூ.9.66 கோடியில் துவக்கப்படும்.
105 கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு ரூ.27.74 கோடியில் சொந்த அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.
நவீன வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க, 95 கூட்டுறவு நிறுவனங்கள் ரூ.14.75 கோடியில் நவீனமயமாக்கப்படும்.
சேலம் - மஞ்சக்குட்டை ஊராட்சி, செம்மடுவு கிராமத்தில் ரூ.15.85 கோடியில் மாநில அளவிலான புதிய கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய தலைமை அலுவலகக கட்டடங்களும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடமும் ரூ.17.87 கோடி மதிப்பில் கட்டப்படும்.
---உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு---
அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மக்களின் வரவேற்பினை பெரியளவில் பெற்றுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 189 அங்காடிகள் கூடுதலாக துவங்கப்படும்.
நெல் உலர்களன் வசதி, நவீன நெல் சேமிப்பு கொள்கலன் வசதிகளுடன் கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ரூ.70 கோடி மதிப்பில் கட்டப்படும்.
சென்னை IIT-யின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்துடன் 1 லட்சம் மெ.டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன சேமிப்பு கிடங்குகள் ரூ.100 கோடியில் கட்டப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு வளாகங்களில் சேதமடைந்த சாலைகள் ரூ.120 கோடியில் கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்படும்.
வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் 75000 மெ.டன் கொள்ளளவு கொண்ட நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன்கள் ரூ.225 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
---மீன்வளம்---
கன்னியாகுமரி - தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் முதற்கட்டமாக கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ரூ.60 கோடியிலும், ஹெலன் நகர், ராஜாக்க மங்களம் மற்றும் கொட்டில்பாடு கிராமங்களில் மீன் இறங்கு தளங்கள் ரூ.39.90 கோடி மதிப்பிலும் அமைக்கப்படும்.
பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கை காரணங்களால் மூடாதவாறு இருக்க ரூ.27 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி துறைமுகத்தின் படகு அணையும் தளத்தை ரூ.25 கோடியில் நீட்டித்து கூடுதல் படகுகள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்படும்.
ராமநாதபுரம் - மண்டபம் (வடக்கு) (தெற்கு) கிராமங்களில் ரூ.20 கோடியில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும். காஞ்சிபுரம் - புது குப்பம், உய்யாலி குப்பம் கிராமங்களில் ரூ.17 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.
கடலூர் - அன்னன்கோயில், புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும். முடசலோடை கிராமத்தில் மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக ரூ.9.50 கோடியில் நீட்டிக்கப்படும்.
---கால்நடை பராமரிப்பு---
கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பை வணிக ரீதியில் மேற்கொள்ளும் 1,925 பயனாளிகளுக்கு 50% மானியத்தில் தலா 1000 கோழிக் குஞ்சுகள், ஒரு மாதத்திற்கான கோழித் தீவனம் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்துக் கொடுக்க ரூ.14.73 கோடி வழங்கப்படும்.
ரூ.1.60 கோடியில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும். ரூ.3.50 கோடியில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும், ரூ.3 கோடியில் 5 கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனைகளாகவும், ரூ.1.20 கோடியில் நாகர்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் முதல்தர சேவைகள் வழங்கும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.
90.35 லட்சம் கால்நடைகளுக்கு ரூ.22.03 கோடியில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் உள்ள ஆட்டம்மை தடுப்பூசி மருந்து உற்பத்திப் பிரிவு ரூ.18.03 கோடியில் நல் உற்பத்தி நடைமுறைகள் (GMP) தரத்திற்கு தரம் உயர்த்தப்படும்.
தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
---பள்ளிகல்வி துறை---
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறவும், உயர்கல்வித் துறை மூலம் 7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும்.