அரசு பள்ளியில் சீருடை மாற்றம்: செங்கோட்டையன் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேற்று விழா ஒன்று நடைப்பெற்றது. 8 மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக அரசு அங்கீகார ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்குத்துறை அமைச்சர் பி.தங்க மணி, சமூகநலம், சத்துணவுத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்:-
ஏழைகளே இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா கனவு கண்டார். அதை நனவாக்க சிறந்த கல்வியால் மட்டுமே முடியும். எனவே, தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க சிறந்த சீர்திருத்தங்களை செய்து வருகிறோம்.
அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு வண்ணச்சீருடையும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு வண்ணச்சீருடையும், 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு வண்ணச்சீருடையும் என 3 வண்ணச்சீருடைகள் வரும் கல்வி ஆண்டு முதல் நடை முறைப்படுத்தப்படும்.
20 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.2 கோடியே 13 லட்சம் செலவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையங்கள் அமைத்து சிறந்த மாணவர்களை உருவாக்கும் திட்டமும் செயல்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர். விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் அமைய உள்ளது என்றார்.
மேலும் 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் வழியாக கல்வி கற்பிக்கும் திட்டம் பற்றி 2 நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.