ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளிபடுத்தும் வகையில் வைகோ வெளியட்ட அறிக்கை: 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், மனிதத்தையே குழிதோண்டிப் புதைக்கும் கொடுமைகள், நீதியைக் கழுத்து அறுக்கும் கோரங்கள் இவற்றை உலகத்திற்குத் தக்க ஆவணங்களோடு செய்திகளாகத் தருகின்ற அசோசியேடட் பிரஸ் செய்தி ஊடகம், 2009 முள்ளிவாய்க்கால் கொடூரத்தோடு ஈழத் தமிழ் இனப் படுகொலைக் கொடுமைகள் முற்றுப் பெறவில்லை; இன்றுவரை தொடர்கின்றது; மனித குலத்தின் மனசாட்சியோ, ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்துக் கிஞ்சிற்றும் கருதாமல் மரத்துப் போய், ஆழ்துயிலில் இருக்கின்றது என்ற உண்மையை அம்பலத்தி உள்ளது.


2017 ஜூலை 18 இல், ஐரோப்பாக் கண்டத்திற்கு அடைக்கலம் தேடி வந்த ஈழத்தமிழ் இளைஞர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை இதயம் வெடிக்கத் தெரிவித்து இருக்கின்றார்கள். இந்தப் படத்தில் காணப்படும் இளைஞன் முதுகில் காணப்படும் சித்திரவதைத் தழும்புகள், 2017 ஜூலை 18 ஆம் நாள், லண்டனில் அசோசியேடட் பிரஸ் நேர்காணலின்போது எடுக்கப்பட்ட படம் ஆகும்.


மாதக்கணக்கில், வருடக்கணக்கில் மிகவும் இழிவான முறையில் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தி சிங்கள அரசின் புலனாய்வுக் காவல்துறையினரும், படைவீரர்களும் செய்த கொடுமைகளால் ஏற்பட்ட மன அதிர்ச்சியால், பலமுறை தற்கொலை செய்துகொள்ளத் தான் முடிவு எடுத்ததையும் கூறி உள்ளார். இப்படி ஐரோப்பாக் கண்டத்தில் அரசியல் அடைக்கலம் தேடிவந்த 50 தமிழ் இளைஞர்கள், தற்போதுள்ள சிங்கள அரசின் ஒடுக்குமுறையைக் கண்ணீர் மல்கக் கூறி உள்ளனர். அவர்கள் கூறி இருப்பதை, ஊடகச் செய்திகளில் படிக்கும்போதே மனம் வேதனையால் பரிதவித்துத் துடிக்கின்றது.


குறிப்பாக, அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இந்தச் செய்தி அசோசியேடட் பிரஸ் மூலமாகப் பரவியவுடன், மனித நேயம் கொண்ட மருத்துவர்கள், உளவியலாளர்கள், சட்ட வல்லுநர்கள், மனித உரிமை அமைப்புகள், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்துத் திட்டவட்டமான முழுமையான நீதி விசாரணையை ஐ.நா. மன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


சிங்கள அரசை எதிர்த்துப் போராட முனைவதாகக் குற்றம் சாட்டி, தமிழ் இளைஞர்களை வதைமுகாம்களில் அடைத்துத் துன்புறுத்தி உள்ளனர். இது 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்த ஆண்டு ஜூலை வரை அவர்களை சிங்களக் காவல்துறையும் இராணுவமும், காவல்துறையும் கோரமாக வதைத்த செய்திகளை அசோசியேடட் பிரஸ் வெளியிட்டுள்ளது. 


அமெரிக்க நாட்டின் செனட் சபையின் மூத்த உறுப்பினரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான பேட்ரிக் லீகே, நடந்த கொடுமைகள் குறித்துக் குற்றம் சாட்டி உள்ளார். யுத்தக் குற்றங்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ள விதத்தில்தான் கைது, சிறையில் அடைப்பு குறித்து உலக நாடுகள் வரையறுத்துள்ள  சட்ட விதிகள், நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இலங்கை செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில், 2015 க்குப் பிறகு, 7.6 கோடி டாலர், இந்திய நாணய மதிப்பில் 65 கோடி ரூபாய், இலங்கை அரசுக்கு அமெரிக்கா நிதி வழங்கி உள்ளது என்றும் கூறி உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகிறார்; இலங்கையில் நல்லிணக்கத்தையும், நீதியையும் நிலைநாட்டுவோம் என்று கூறிய சிங்கள அரசு, அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டது குறித்து, மேலும் ஆதாரமான சாட்சியங்களைச் சேகரித்துக்கொண்டு இருக்கின்றேன்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கம் என்கிறார்.


மருத்துவர்களும், தடய ஆய்வாளர்களும் மிகுந்த கவலையோடு,  இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை ஆணையர் ஜெய்ட் அல் ராட் ஹூசைன் அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அசோசியேடட் பிரஸ் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட இன்னொரு தமிழ் இளைஞர், தான் ஒரு சின்னஞ்சிறு அறையில் 21 நாள்கள் சித்திரவதைக்கு உள்ளானதாகவும், சிகரெட் நெருப்பால் உடலில் சுட்டனர் என்றும்; தலைகீழாகக் கட்டி வைத்து இரும்புக் கம்பிகளால் தாக்கியதாகவும், 12 முறை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறி உள்ளார்.


இன்னொரு இளைஞன், தன்னை வீட்டில் இருந்து ஐந்து பேர் கடத்திக்கொண்டு வந்து, சிறையில் அடைத்து, பின்னர் சித்திரவதை அறைக்குக் கொண்டு சென்றனர் என்றும், அந்த அறையின் சுவர்கள் முழுக்க இரத்தம் தெறித்து இருந்ததைப் பார்த்தாகவும், தனக்கும் அத்தகைய கொடுமை நிகழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளார்.


தங்களைத் துன்புறுத்தியவர்கள் இலங்கை அரசு காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டார்களாம். ஆனால், அவர்களுள் பலர் சிங்கள இராணுவச் சிப்பாய்களாகவே காணப்பட்டனராம். அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் எங்கெல் என்பவர், தலைநகர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அரசின் கொள்கையை வகுப்பவர்கள்; தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை அறிக்கைகளைப் புறக்கணிக்கக்கூடாது; இதுகுறித்து விசாரணை முழுமையாக முடியும் வரை இலங்கைக்கு  இராணுவ உதவிளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.


ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில், இதுபற்றிக் கூறும்போது, அதிர்ச்சி தரத்தக்க இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவிதத்தில் முறையான விசாரணை நடத்துவது என்பது குறித்துப் பரிசீலித்துக் கொண்டு இருக்கின்றோம் என்று கூறி உள்ளார்.


இதே அசோசியேடட் பிரஸ் செய்தி ஊடகம்தான், ஐ.நா.வின் அமைதிப் படையாக ஹைதி நாட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த 134 இராணுவச் சிப்பாய்கள், சிறுவர் சிறுமிகளைப் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியதாக ஆதாரத்தோடு குற்றம் சாட்டியது. தகுந்த சாட்சியங்கள் இருந்தும், இலங்கை இராணுவச் சிப்பாய் எவர் மீதும் குற்ற வழக்கு பதியப்படவில்லை.


ஜெகத் ஜெயசூர்யா என்பவன், இலங்கை இராணுவத் தளபதியாக இருந்து, பல கொடுமைகளை இழைத்தவன்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி, சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த பலரைக் கொலை செய்த குற்றச்சாட்டுக்கும், போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணமானவனுமாகிய இக்கொடூரன் 2014 முதல்  தென் அமெரிக்காவில், கொலம்பியா, பெரு, சுரிநாம், பிரேசில் ஆகிய நாடுகளில் இலங்கைத் தூதராகப் பொறுப்பு வகித்த அக்கிரமமும் நடந்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தென் அமெரிக்காவில் உள்ள மனித உரிமைக் குழுக்கள், தக்க ஆதாரங்களோடு ஜெகத் ஜெயசூர்யா மீது குற்றச்சாட்டுகளைத் தொடுத்தவுடன், பிரேசிலில் இருந்து இலங்கைக்கு ஓடிப்போனான்.


இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, இக்கொலைகாரனை யுத்தக் கதாநாயகன் என்று வருணித்ததோடு, அவன் மீதோ, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த எவர் மீதும் எந்த விசாரணையும் எந்த நாட்டிலும் நடத்த நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்தார்.


தெற்கு ஆப்பிரிக்காவில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநரான யாஸ்மின் சூகா அம்மையார், மனித உரிமைக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்புவார்கள் என்று தான் நம்புவதாகவும், ஐக்கிய நாடுகள் மன்றம், குவாதிமாலாவில் நடைபெற்ற படுகொலைகள் குறித்து, சுதந்திரமான அமைப்பு விசாரணை செய்தது போன்று, இலங்கை இராணுவத்தின் மீதும் விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இலங்கையில் நடைபெறும் எந்த விசாரணைக்கும் வருகின்ற சாட்சிகளுக்குப் பாதுகாப்பு கிடையாது என்பதோடு, மனித உரிமைகளை நசுக்கிக் கொடுமை இழைத்தவர்களே விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கின்ற அநீதியையும் சுட்டிக் காட்டுகின்றார்.


இலங்கையில் தமிழ் இனப் பண்பாடு கலாச்சார அடையாளங்களை அடியோடு அழிக்கின்ற குறிக்கோளோடு சிங்கள அரசு செயல்படுவதை, தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றார்கள்.


ஐக்கிய நாடுகளின் கணக்கின்படியே, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும், இறுதிக்கட்டப் போரில் 40000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், ஐ.நா.விசாரணை மதிப்பிடுகின்றது.


இலங்கையின் வடக்கு மாகாண முதல் அமைச்சரான விக்னேஸ்வரன் அவர்கள், தமிழர் படுகொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்துமாறு, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையருக்கு, தான் விடுத்த வேண்டுகோள் செயலாக்கப்படவில்லை; அப்படி ஒரு பன்னாட்டு விசாரணை நடைபெற்று இருக்குமானால், தொடரும் இராணுவக் கொடுமைகளுக்குத் தடையாக அமைந்து இருக்கும் என்று கூறி உள்ளார்.


உலகில் தமிழனுக்கு நீதி கிடைப்பது இல்லை; அதிலும் ஐ.நா.விலேயே அதற்கு இடம் இல்லை என்பதனால்தான், ஹைதி நாட்டில் சிங்கள இராணுவத்தினர் சின்னஞ்சிறார்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய உண்மை வெளிவந்த பின்னரும், வேறு நாடுகளுக்கு அனுப்பப்படும் அமைதிப்படைகளில் சிங்கள இராணுவத்தினரும் இன்னமும் இடம் பெறுகின்றார்கள்.


ஐ.நா. செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் புஜாரிக், நவம்பர் 10 ஆம் தேதியன்று ‘அசோசியடேடட் பிரஸ்’ செய்தி ஊடகத்திற்கு ஒரு தகவலைத் தந்துள்ளார்.


ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ், ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளையும் அழைத்துள்ளார். பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட இராணுவத்தினர், ‘ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடத்தப்பட மாட்டார்கள்’ என்று கூறி உள்ளார்.


நானிலத்தில் தமிழனுக்கு நாதியே இல்லையா? நீதி கிடைக்காதா?


ஈழத்தமிழர்களைச் சூழ்ந்துள்ள நரக இருள் என்று விலகும்? எப்பொழுது விடியும்? என்ற ஏக்கப் பெருமூச்சு எழுந்தாலும், மான உணர்வுள்ள தமிழர்கள் ஈழத்திலும், புலம் பெயர் நாடுகளிலும், தாய்த் தமிழகத்திலும், வீறுகொண்டு எழுந்து நீதியை நிலைநாட்டி, ஈழத்திற்கு விடுதலை வெளிச்சத்தை வழங்கும் காலம் மலர்ந்தே தீரும்.


இவ்வாறு கூறியுள்ளார்.