தமிழக ஆளுநர் மாளிகையில் அதிகார அத்துமீறல் நடப்பது கண்டிக்கத்தக்கது என வைகோ எச்சரித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் செயலாளர் பொறுப்பில் உள்ள ராஜகோபால் அவர்களின் தாயார் சரஸ்வதி அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.


அவரைக் கவனித்துக் கொள்ள சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஏழு பேர் 12 மணி நேரம் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. மெடிக்கல் கவுன்சில் விதிமுறைகளை மீறி முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவர்களை, இதுபோன்ற முக்கியப் பிரமுகர்களை கவனிக்க நியமித்ததை எதிர்த்த மருத்துவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.


ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் அவர்கள் தாயார் ராஜ்பவனுக்கு உடல்நலம் தேறிய நிலையில் சென்றுவிட்டார்.


ஆனால் அங்கும் அவரைக் கண்காணிக்க மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை உத்தரவிட்டது. ஆனால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் ராஜ்பவனுக்கு செல்ல முடியாது என்று உறுதியாக கூறிவிட்டதால், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை ஆளுநர் மாளிகை மிரட்டி வருவதாகத் தெரிகின்றது. ராஜ்பவனுக்கு ஆளுநரின் செயலாளர் தாயாரைக் கவனிக்கச் சென்ற இன்னொரு மருத்துவரை, வேறு ஒருவர் வரும்வரை வெளியே விட முடியாது என்று தடுத்து வைத்திருந்த செய்தி அறிந்து மருத்துவர்கள் கொதித்துப் போய் உள்ளனர்.


ஆளுநர் மாளிகையின் அதிகார அத்துமீறலும், மருத்துவர்களை மிரட்டும் போக்கும் வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஏழை எளிய பொதுமக்களுக்குத் தன்னலம் கருதாமல் சேவையாற்றி வரும் அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களை, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அடிபணிய வேண்டும் என்று ஆளுநர் மாளிகை நினைப்பது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்று எச்சரிக்கின்றேன்." என குறிப்பிட்டுள்ளார்.