வன்னியர் இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் அதிமுக திடீர் அமளி... அப்படி என்ன சொன்னார் வேல்முருகன்?
Vanniyar Internal Reservation Issue: வன்னியர் உள் இட ஒதுக்கீடு பிரச்னை சட்டப்பேரவையில் எதிரொலித்த நிலையில், வேல்முருகன், செல்வப்பெருந்தகை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
Vanniyar Internal Reservation Issue: வன்னியர் சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதை தாமதப்படுத்தும் வகையில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆறு மாத கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி சட்டப்பேரவையில் இன்று (ஏப். 13) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரையை வழங்க ஆணையத்திற்கு காலக்கெடுவை நீட்டித்திருப்பதன் மூலம் வன்னியர் ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜி.கே. மணி குறிப்பிட்டார். மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு வழங்கினால் போதாதா என அவர் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றம் தடை ஏன்?
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர்,"அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக அவசர அவசரமாக வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றியதால் நீதிமன்றத்தில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. புதிய அரசு அமைந்தபிறகு தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றோம். மேலும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கால நீட்டிப்பை நாங்களாக நீட்டிக்கவில்லை, ஆணையத்தின் விருப்பப்படியே நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
'முதலமைச்சர்தான் மகிழ்வார்'
தொடர்ந்து, அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது,"ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதிதாசன் தலைமையில் வன்னியர் உள் ஒதுக்கீட்டை வழங்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றாலும் 4,5 மாதத்திலேயே அவர்கள் பரிந்துரையை தந்து விடுவார்கள். மேலும், வன்னியர் உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் பாமகவை காட்டிலும் முதலமைச்சர்தான் அதிகமாக மகிழ்ச்சி அடைவார்" என்றார்.
அதிமுக ஆட்சியில் துப்பாக்கிச்சூடு
மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசும்போது,"இந்த கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை பெறும் வகையில் போர்க்கால அடிப்படையில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பாமக உள்ளிட்ட கட்சிகள் தோன்றுவதற்கு முன்பாகவே வட மாவட்டங்களில் வன்னியர்கள் பல ஆண்டுகளாக திமுகவையே நம்பி இருந்தனர்" என்றார்.
வன்னியர்கள் காலம் காலமாக திமுகவிற்கு ஆதரவாக இருந்து வருவதாக வேல்முருகன் பேசியதற்கும், பாமக நிறுவனர் ராமதாசுவே, இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் போது அதிமுக ஆட்சியில் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறியுள்ளார் என்று குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசியதற்கும் அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ