விஜயபாஸ்கர், சரத்குமார் நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன்
நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு பங்களா, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, சென்னை, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல்லில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடு, சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை, திருச்சியில் உள்ள அவரது கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.
இதேபோல், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார் வீடு, சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் செய்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் பற்றிய அறிக்கையை, இ–மெயில் மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சோதனையை அடுத்து விஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமிக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நாளை நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை இவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது