குடிநீர் பஞ்சம்: ஸ்டாலின் தலைமையில் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
வரும் 24 ஆம் தேதி தமிழக அரசுக்கு எதிராக தண்ணீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழகத்தின் ஏற்ப்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.
கடுமையான வெயில் காரணமாக பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் வற்றிப்போய் மிகவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் தினமும் அவர்களது அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டை சீர் செய்ய முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் வரும் 24-6-2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரசுக்கு எதிராக நடத்தப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.