அதிமுக-விலிருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர் அணியின் கோரிக்கை ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கோரிக்கையை அமைச்சர்கள் ஏற்று நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர். இதை ஏற்று அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக நேற்று டிடிவி தினகரனும் அறிவித்தார்.ம் இதைத்தொடர்ந்து இரு அணியாக பிரிந்து இருக்கும் அதிமுக ஒன்றாக இணைவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி இருக்கிறது.


அதிமுக இரு அணிகள் இணைவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய அணியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.


மேலும் நாளை முதல் அதிமுக அம்மா கட்சி குழுவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதிமுக-வை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.


சமரச பேச்சுவார்த்தையின் போது இரு அணியினரும் பல்வேறு நிபந்தனைகளை முன் வைக்க உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று அவருடைய அணியினர் தீவிரமாக உள்ளனர். அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சராக நீடிப்பார் என்றும் அதிமுக அம்மா கட்சியினர் உறுதியாக உள்ளனர்.


இந்நிலையில் அதிமுக இரு அணிகளை சேர்ந்த தலைவர்களும் நாளை பேச்சுவார்த்தை தொடங்க உள்ள அதே வேளையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தும் சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.