மத்திய அரசிடம் திமுக அரசு அடிபணிந்து போவது ஏன்? சீறும் சீமான்
அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, மாநில ஆளுநரிடம் அடிபணிவது ஏன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்புகிறார்
சென்னை: மத்திய அரசிடம் மாநில அரசும், ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் அடிபணிந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் காட்டமான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, மாநில ஆளுநரிடம் அடிபணிவதா என்று அவர் கேள்வி எழுப்புகிறார். இதுதொடர்பாக தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் அனைத்துத் துறைச்செயலாளர்களும், தங்கள் துறை தொடர்பான அனைத்துத் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை தமிழக ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டுமென தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியிடம் திமுக சரணடைந்து விட்டது என்று கூறும் சீமான், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக தொடர்பாக தான் வெளியிட்ட அறிக்கையினை, டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் சீமான்...
”மத்திய அரசை ஆளும் பாஜக அரசின் முகவராகச் செயல்படும் ஆளுநரின் அத்துமீறலுக்கு வழிவகுத்திடும் திமுக அரசின் இச்செயல் மிகத்தவறான முன்னுதாரணமாகும். இதற்கு ஐயா இறையன்பு போன்றவர்களும் துணைபோவது ஏமாற்றமளிக்கிறது. மதிப்புவாய்ந்த பெருந்தகைகள் இதுபோன்ற மதிப்பிழக்கும் வேலைகளைச் செய்யக்கூடாது”.
”ஆளுநர் பதவி என்பது அலங்காரப் பதவிதானே ஒழிய, அதிகாரம் செலுத்தும் நிர்வாகப் பதவியல்ல".
மாநில ஆட்சியமைப்பு முறைகளில் தலையிட ஆளுநருக்கென்று தனிப்பட்ட அதிகார வரம்புகள் எதுவும் இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் வரையறுக்கப்பட்டவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது என்பது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைத்திடும் கொடுஞ்செயலாகும்”.
Also Read | கடவுள் தங்கத்தை உருக்காதே தமிழ அரசே! கையெழுத்து வேட்டை தீவிரம்
”ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக மாநில அரசு இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் தர மறுத்து தனது கடமையைச் செய்யத் தவறும் ஆளுநர், மாநில நிர்வாகத்தை ஆய்வு செய்வதாகக் கூறுவது கேலிக்கூத்து. பாஜக, தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதும், மாநில அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்வதும், துறைச் செயலாளர்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்வது என ஆளுநர்கள் மூலமாகக் குடைச்சலைக் கொடுக்கும் பாஜக அரசின் செயல் கண்டனத்துக்குரியது”.
”அதிமுக ஆட்சியில் ஆளுநரின் தலையீடுகளுக்கு எதிராகப் போராடிய திமுக, தங்களது ஆட்சியில் ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கை எதிர்க்க துணிவற்று, முழுமையாகப் பணிந்துபோவது மாநிலத் தன்னுரிமையைக் காவு கொடுக்கும் உரிமை இழப்பாகும். பாஜகவின் அடாவடித்தனத்தை எதிர்த்துச் சண்டையிடாது சமரசமடைந்த திமுகவின் அணுகுமுறை வெட்கக்கேடானது”.
”திமுக, பாஜகவை எதிர்க்கிற இலட்சணம் இதுதானா? இதுதான் ஆரியத்திற்கு எதிராக திராவிடம் செய்யும் சமரசமற்ற சமரா? 'ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?' என முழங்கிய அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சியில் நடத்துவதாகக் கூறும் திமுக அரசு, அதற்கு மாறாக ஆளுநரின் முடிவுக்கு அடிபணிந்து மாநில உரிமையைப் பறிகொடுப்பது மிகப்பெரும் சனநாயகத்துரோகமாகும்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
Also Read | அதானி குழுமத்துக்கு ஒரு நியாயம்? ஷாருக்கானின் மகனுக்கு ஒரு நியாயமா? சீமான் கேள்வி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR