3-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ, அச்சத்தில் பொதுமக்கள்!
தொடர்ந்து இரண்டு நாட்களாக பரவி வரும் காட்டுத்தீ இன்று 3-வது நாளாக பற்றி எரியும் நிலையில் அதனை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடுமையாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் வெளியில் நடமாட முடியாமல் முடங்கிபோய் உள்ளனர்.
இதுபோன்ற நேரங்களில் சுற்றுளா பயணிகள் குளிர் காய்வதற்காக வனப்பகுதிகளில் தீ மூட்டுவதும், அது பரவி பெரிய காட்டுத்தீயாக மாறுவதும் வழக்கமாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் வனப்பகுதியான டைகர்சோலை குறிஞ்சிநகர், செண்பகனூர் மலை உச்சி, டால்பின் நோஸ், வட்டக்கானல் ஆகிய பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக பரவி வரும் காட்டுத்தீ இன்று 3-வது நாளாக பற்றி எரியும் நிலையில் அதனை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
காட்டுத்தீ காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக உருவெடுத்துள்ளது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொடைக்கானல் வனப் பகுதியை பொறுத்தவரையில் பல அரிய வகை மரங்களும், மூலிகைகளும் உள்ளன. 3 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயால் அவை அனைத்தும் எரிந்து சாம்பலாகி வருகின்றன.
பரவி வரும் காட்டுத்தீயால் வன விலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காட்டு தீ இடைவிடாமல் எரிந்து வரும் நிலையில் வனப்பகுதியையொட்டி வசிக்கும் பொதுமக்களும் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
எனவே தீ விபத்தை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.