உள்ளாட்சிப் பதவிகளில் உள்ள பெண் கவுன்சிலர்களின் கணவர்களின் ஆதிக்கம் குறித்த புகார்கள் தமிழ்நாடு முழுவதும் எழுந்த வண்ணம் உள்ளன. பல வார்டுகளில் கவுன்சிலர்களைவிட அவர்களின் கணவர்களே அடாவடி செய்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்களுக்கு நிகராக பெண்களும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின்  உள்ளாட்சிப் பணிகள், ஆண்களுக்கு நிகராக பெண்களும் இணைந்துள்ளதால் சம பலத்துடன் இயங்கி வருகிறது. 


மேலும் படிக்க | முறைகேடாக சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற பெண் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை முடக்கம்


ஒவ்வொரு தேர்தலில் சுழற்சி முறையில் இந்த மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பார்த்தால், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில் மேயர், 50 பெண் கவுன்சிலர்கள் உட்பட 4 மண்டல, 3 நிலை குழு தலைவர்களும் பெண்கள் வசமே உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாநகராட்சி மேயர் பதவி கூட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, தற்போது மேயராக பிரியா ராஜன் செயல்பட்டு வருகிறார். 


இந்நிலையில், உள்ளாட்சிப் பொறுப்புகளில் ஏற்கனவே கவுன்சிலர்களாகவும், மேயராகவும் இருந்த பெண்களுக்கு போதிய அனுபவம் உள்ளதால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவர்களால் இயங்க முடிகிறது. ஆனால், புதிதாக வந்த பல பெண் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்து எதுவும் தெரியாத சூழலே நிலவி வருகிறது. 


இதனால் அந்தந்த கட்சியில் உள்ள அவர்களது கணவர்கள் பின்னால் இருந்து வழிகாட்டுகின்றனர். இதில் எந்த தவறுமில்லை என்ற போதிலும், இதன் எல்லை ஒரு கட்டத்தில் அளவுக்கு மீறி சென்றுவிடுவதில்தான் பிரச்சனையே தொடங்குகிறது. 


வழிகாட்டுதல் என்பது வேறு, அதிகாரத்தை மொத்தமே எடுத்துக்கொள்வது வேறு இல்லையா ?!. பல வார்டுகளில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தாங்கள் தான் எல்லாமே என 'பந்தா' காட்டும் அளவுக்கு பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது. கட்டப் பஞ்சாயத்து, மாமூல் வசூல், அரசு அதிகாரிகளுடனான மோதல் என அவர்களது பங்கு எல்லை மீறிப்போகிறது. இவ்வளவு ஏன் ? வார்டு தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க பெண் கவுன்சிலர்களுக்கு போன் செய்தால், அவர்களது கணவர்களே எடுத்துப் பேசுவதாக அந்தந்த வார்டு பகுதி மக்கள் புலம்பும் அளவுக்கு நிலைமை உள்ளது. 


இது, கட்சிப்பாகுடின்றி நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட இரு கட்சிகளின் பிரதிநிதிகளுமே இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். கவுன்சில் கூட்டத்தில் மட்டும்தான் பங்கேற்கவில்லையே தவிர, கவுன்சிலரின் அலுவலகம் துவங்கி, நிர்வாக நடவடிக்கைகள் வரை அனைத்திலும் கணவர்களின் ஆதிக்கமே அதிகரித்துள்ளது. 


இதன் காரணமாக, சில வார்டுகளில் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பெண் கவுன்சிலர்களின் கணவர்களுக்குமே அடிக்கடி மோதல் ஏற்படுவதால், அரசுத் திட்டங்கள் தேக்கமடைகின்றன. இவர்களின் ‘ஈகோ’ மோதல் காரணமாக மக்களிடம் போய்ச்சேர வேண்டிய திட்டங்கள் பாதிப்படைவதாக அந்தந்த பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் புலம்பித் தீர்க்கின்றனர். 


இந்தப் பிரச்சனை தொடர்ந்து விவாதம் ஆகி வரும் நிலையில், சமீபத்தில் சென்னை தண்டையார்பேட்டையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டார். அப்போது, கவுன்சிலர்களின் உறவினர்கள் பலர் கூட்டத்தில் இருந்தனர். அரங்கத்தில் இருந்து திடீரென்று எழுந்து சென்ற மேயர் பிரியா ராஜன், கவுன்சிலர்களின் உறவினர்கள், உடன் வந்தவர்கள் என அனைவரும் வெளியேறுமாறு திட்டவட்டமாக தெரிவித்தார். இதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. 


மேலும் படிக்க | முதல் முறையாக எதிர்கட்சி உறுப்பினர் இல்லாத மன்றமாக மாறிய சின்னாளப்பட்டி பேரூராட்சி


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கு தங்களின் பணி என்ன என்பது தெரியும் ; யாருக்காக பொறுப்பு வழங்கப்பட்டதோ அவர்கள்தான் பணியை செய்ய வேண்டும். அதைவிடுத்து அவர்களின் கணவர்கள் தலையிட்டால், தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியாகக் கூறினார். 


ஒரு பெண் மேயரின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாடு முழுக்க இது சாத்தியமா என்றால் கேள்விக்குறிதான். இன்றுகூட கோவை மாநகராட்சியில் இருந்து ஆடியோ வெளிவந்திருக்கிறது. கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


அதில், சந்தைக் கடை விவகாரம் தொடர்பாக பேசிய பேச்சில் ‘இனிமேல் நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள். நீங்கள் வசூல் செய்ய வேண்டாம்" என்று ஆனந்த்குமார் ஏற்கனவே உள்ள நபரிடம் கூறுகிறார். மாமூல் விவகாரத்தைத் தான் அவர் பேசுகிறார் என்பது அப்பட்டமாக அந்த ஆடியோவில் தெரிகிறது. 


வெறும் மாமூல் மட்டுமல்ல. கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்த்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அந்த வார்டு மக்கள் தெரிவிக்கின்றனர். பிறப்பு சான்றிதழ் முதல் கட்டட வரி வரை அனைத்திலும் மேயர் கல்பனாவின் கணவரின் தலையீடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அமைச்சர்கள் வருகை, ஆய்வுக் கூட்டம் என ஆனந்தகுமார் நிழல் மேயராகவே வலம் வருவதாக அரசு அதிகாரிகள் புலம்புகின்றனர். 


உள்ளாட்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக அரசு இட ஒதுக்கீடு என்பதை கொண்டுவந்து செயல்படுத்துகிறது. ஆனால், கட்சியில் செல்வாக்கு உள்ளவர்கள் தங்களின் மனைவியை ‘டம்மியாக’ நிற்க வைத்து தாங்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வது எந்த வகையில் ஜனநாயகம் ? பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் செய்யும் இதுமாதிரியான அராஜகம், வாக்களித்த மக்களை இழிவுபடுத்தும் செயல் இல்லையா என்று அரசியல் ஆர்வலர்கள் ஆதங்கள் தெரிவித்துள்ளனர். 


இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வுதான் என்ன ?. பெண் கவுன்சிலர்களின் கணவர்களை ஆதிக்கம் குறித்து தமிழக அரசும், அந்தந்த கட்சிகளும் எச்சரிக்கை விடுத்தும் இதுதொடர்கதையாகி தான் வருகின்றன. இனி, நாங்கள் ‘டம்மிகள்’ இல்லை என்பதையும், வெறும் ‘பொம்மைகள்’ இல்லை என்பதையும் அந்தந்த வார்டு பெண் கவுன்சிலர்கள்தான் முன்னகர வேண்டும். ஏனெனில், நீங்கள் உங்கள் கணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல ; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.! 


மேலும் படிக்க | விமர்சனங்களை எதிர்கொள்ள நான் எப்போதும் தயங்கியதில்லை -முதல்வர் ஸ்டாலின்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ