இனி வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்டா மாறுதலுக்காக தாசில்தார் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இணையதளம் மூலம் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த நடைமுறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


ஆனாலும், இணையதளம் மூலம் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று அனைத்து ஆவணங்களின் நகல்களையும் அளிக்க வேண்டியது இருந்தது. இதுபோன்ற சிக்கலை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா பெறுவதற்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ளது.


பட்டா மாறுதல் தொடர்பான பணிகளை முடிக்கும் வகையில் சாப்ட்வேரில் சொத்து தொடர்பான பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன.


ஏற்கனவே உள்ள இணையதள பட்டாவில் சொத்தை கிரையம் முடித்து கொடுப்பவரின் பெயர் சரியாக உள்ளதா?, சர்வே எண், உட்பிரிவு எண், கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடம் ஆகியவை இணையள சிட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி சரியாக உள்ளதா? வில்லங்கம் ஏதேனும் உள்ளனவா? என்பன போன்று 5 கேள்விகளுக்கான பதிலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இந்த நடைமுறை முடிந்ததும் தானாகவே இணையதளத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். ட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ள விவரம் கிரையம் முடித்து கொடுத்தவர் மற்றும் கிரையம் பெற்றவர்கள் பத்திரப்பதிவின்போது அளித்த செல்போன் எண்களுக்கு அனுப்பப்படும். கிரையம் முடித்தவர்கள்  http://eservices.tn.gov.in   என்ற இணையதள முகவரியில் இருந்து பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்திரப்பதிவின் போது இ-மெயில் முகவரி அளித்திருந்தால் அந்த முகவரிக்கு பட்டா அனுப்பி வைக்கப்படும்.


இதற்கான அரசாணையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.