வந்தாச்சு! தூய்மை இந்தியா-வின் மின்சாரம் தயாரிக்கும் பயோ-டாய்லெட்!
ஐ.ஐ.டி.காரக்பூர் சாதனை! கழிவுநீரை மறுசுழற்சி செய்வதோடு மட்டுமல்லாது, மின்சாரமும் தயாரிக்க்கும் பயோ-எலெக்ட்ரிக் டாய்லெட் உருவாக்கியுள்ளது!
ஐ.ஐ.டி.காரக்பூர் சாதனை! கழிவுநீரை மறுசுழற்சி செய்வதோடு மட்டுமல்லாது, மின்சாரமும் தயாரிக்க்கும் பயோ-எலெக்ட்ரிக் டாய்லெட் உருவாக்கியுள்ளது! இந்த பயோ-டாய்லெட் தொடர்பாக, ஐ.ஐ.டி.காரக்பூர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பது....!
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதி பங்களிப்பு உதவியுடன் இந்த பயோ- எலெக்ட்ரிக் டாய்லெட்டை உருவாக்கி உள்ளோம். இதை பேராசிரியர் எம்.எம்.காங்ரேகர் தலைமையிலான குழு உருவாக்கியது.
இந்த பயோ- எலெக்ட்ரிக் டாய்லெட் 1,500 லிட்டர் கொள்ளளவை கொண்டது. இந்த பயோ எலெக்ட்ரிக் டாய்லெட் தற்போது சோதனை முறையில், ஐ.ஐ.டி.வளாகத்திலேயே தினமும் 5 பேர் என்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுமார் 6 அடுக்குகளை கொண்ட இந்த பயோ-டாய்லெட்டில் பயன்படுத்தப்பட்ட நீர், கடிகார சுற்று மற்றும் எதிர்-கடிகாரசுற்று முறையில் சுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றப்படும்.
அது மட்டுமல்லாது இதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரமானது இரவு நேரத்தில் மின்விளக்குகளை எரிய செய்வதற்கும், மொபைல் போன்கள், டேப்லெட்கள் உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கும் பயன்படுகிறதாம்.
கிராமங்களில் போதிய வெளிச்சம் இன்மையால் ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள கழிப்பிடங்களை பயன்படுத்த மக்கள் தயங்குதல், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், மக்கள் கழிப்பிடங்களை பயன்படுத்தாமல் இருக்கின்றனர். அவர்களின் குறைகளுக்கு தீர்வு காணும் விதமாக, இந்த பயோ-எலெக்ட்ரிக் டாய்லெட் இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பயோ எலெக்ட்ரிக் டாய்லெட்டிற்கு, மத்திய அரசின் "தூய்மை இந்தியா விருது" வழங்கப்பட்டுள்ளது.