உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றி
ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட மேம்படுத்திய பினாகா ராக்கெட் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிப்பூர்: பினாகா வழிகாட்டப்பட்ட ராக்கெட் அமைப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு டிசம்பர் 19 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ராக்கெட் ஒடிசா கடற்கரையிலிருந்து சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
சில நொடிகளிலேயே 12 ராக்கெட்டுகளை ஏவும் தொழில்நுட்பம் கொண்ட மேம்படுத்திய பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) மூலம் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பினாகா ராக்கெட், நிர்ணயித்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.
புதிய தொழில்நுட்பங்களுடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் தான் பினாகா. கடந்த 2008ம் ஆண்டில் முதன்முதலாக சோதனை செய்யப்பட்ட பினாகா, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சர், ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் சந்திப்பூர் கடல் பகுதியில் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த லாஞ்ர் மூலம் 44 விநாடிகளில் 12 ராக்கெட்டுகளை 12 வெவ்வேறு இலக்குகளை குறிவைத்து ஏவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடத்தப்பட்ட சோதனையில், இலக்குகள் அனைத்தும் மிக துள்ளியமாக தாக்கப்பட்டதாகவும், சோதனையின் போது அனைத்து பணி நோக்கங்களும் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.