இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் 76வது வயதில் இன்று காலமானார். அவரின் இறப்பு செய்தியினை அவரின் குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 1942-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி பிறந்தார். இவர் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்த இவர் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக இருந்தார். இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். 


கருந்துளையினுள் ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.


21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இந்த குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார்.


கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்த தோழி ஜேன் வைல்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 30 வருடங்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், தன்னை கவனித்துக் கொண்ட செவிலியர் எலைனுடன் காதல் கொண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டு பத்தாண்டுகள் அவரோடு வாழ்ந்தார். 


அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார்.


இத்த சிறந்த படைப்பை உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.


இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time), The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. 


இவர் எழுதிய நூல்கள்:-


> காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time)


> கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) 


> பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design)


மறைவு:-
 
ஸ்டீபன் ஹோக்கிங் 14 மாதச் 2018 (இன்று) தனது 76-வது வயதில் காலமானார். இதை அவரின் இறப்பு செய்தியினை அவரின் குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர்.