தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்க கோரி ஏர்செல் நிர்வாகம் மனு கொடுத்துள்ள நிலையில், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஏர்செல் மூடப்படுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோவின் வருகையை தொடர்ந்து பெரும்பாலான மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ஏர்செல் நிறுவனம் அளவுக்கு மீறிய நஷ்டம் காரணமாகவும், கடன் சுமையாலும் தத்தளித்து வந்தது.


ஏற்கனவே பல மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திய ஏர்செல் விரைவில் அனைத்து மாநிலங்களிலும் தங்களது சேவையை நிறுத்தும் அளவுக்கு வந்துள்ளது.இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 3 நாட்கள் ஏர்செல் சேவை தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல இடங்களில் பொதுமக்கள் ஏர்செல் நிறுவனத்தை அடித்து நொறுக்கினர்.


இதையடுத்து, ஏர்செல் நிறுவனம் அளித்த விளக்கத்தில், டவர்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை செலுத்தாததால், டவர்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஏர்செல் சேவையை ரத்து செய்ததாகவும், பின்னர் அவர்களிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக இயக்கப்பட்டதாக கூறியது.


அதைத்தொடர்ந்து, மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில், ஏர்செல் நிறுவனம், திவால் என அறிவிக்கக்கோரி மனு தாக்கல் செய்தது.அதில், தாங்கள் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி மேற்கொண்ட முயற்சி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. கடனை சீரமைப்பது தொடர்பாக, கடன் கொடுத்தவர்கள் மற்றும் பங்கு உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. ஆகவே, இது குறித்து திவால் சட்டத்தின் கீழ் தீர்வு காண்பது தான் சரியாக இருக்கும் என்று கூறியிருந்தது.


இந்நிலையில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஏர்செல் நிறுவனம் இந்த மாதம் மார்ச் 15-ம் தேதியுடன் முழுவதுமாக தனது சேவையை நிறுத்துவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. வாடிக்கையாளர்கள் அதற்குள் தங்களுக்கு விரும்பிய சேவையை தேர்வு செய்துகொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளது.