உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்: தமிழிசை பேட்டி!
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வரும் 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வரும் 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தேசிய அளவில் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அண்மையில் உத்தர பிரதேசத்தில் இரண்டு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு இல்லாவிட்டால், இன்னும் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.
அதேபோல, தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாட்டில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையிலிருந்து மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியார்களிடம் கூறியதாவது:
மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என சொல்லும் காங்கிரஸ் பின்னோக்கி செல்கிறது. எதைக் கொண்டு வைத்தாலும் தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட்தான் வாங்கும். தேர்தலில் மக்கள் எடுக்கும் முடிவை இயந்திரத்தின் மீது போட்டு காங்கிரஸ் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றார்.
மேலும் அவர், திராவிட நாடு குறித்த கருத்தில் ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார். வரும் 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிச்சயம் நிறைவேற்றும். அதிமுகவை பா.ஜ., இயக்குவதாக பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது என்றார்.