பிரணாப்பின் அறிவுரையை பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஏற்குமா? காங்கிரஸ்!
பிரணாப் முகர்ஜியின் அறிவுபூர்வமான அறிவுரைகளை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களான என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது!
மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கக் கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.
பல்வேறு இன, மொழி மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். எனவே மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை இல்லை என்றால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்துப்போய்விடும்.
மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா,,,! பிரணாப் முகர்ஜி தமது உரையில் தேசத்தின் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை போன்றவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் வன்முறைகளில் இருந்து விடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
பொதுவாக தேசத்தின் தற்போதைய நிலவரத்தை பிரணாப் முகர்ஜி அம்பலப்படுத்தியிருக்கிறார். இனியாவது பிரணாப் முகர்ஜியின் அறிவுரைகளை ஏற்று ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை தங்களது போக்கை மாற்றிக் கொள்ளுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.