வருடம் தோறும் சித்திரை மாதம் பவுர்ணமியன்று தமிழகம் எங்கும் விழா கோலமாய்  திகழும். சித்திரை மாதம் பவுர்ணமி என்றாலே, பல்வேறு கோவில்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து, இறைவனை தரிசிப்பது வழக்கம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சித்திரை மாதத்தில் தமிழகத்தில் எத்தனை கொண்டாட்டங்கள் இருந்தாலும் அதில் முக்கிய நிகழ்வு மதுரை மீனாட்சியம்மனின் சித்திரை திருவிழாவும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கிரிவலமும் பிரசித்தி பெற்றது. 


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பல்வேறு முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது.


இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையர் பாரிஜாதம் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


அதில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது...! 


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 15 லட்சம் முதல் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் மற்றும் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பாக வருகிற 28-ந் தேதி மாலை முதல் 30-ந் தேதி காலை வரை பக்தர்களின் வசதிக்காக பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த விரிவான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


இதில் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை மூலமாக கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் மொத்தம் 12 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவிலுக்குள் அழைத்து செல்வதற்காக முதியோர்களுக்கு 3 பேட்டரி கார்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பொது தரிசன பாதையினை மேலும் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


போலீஸ் துறை மூலமாக பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 2 ஆயிரத்து 500 காவலர்கள் பணியாற்ற உள்ளனர். பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை இலவசமாக வைப்பதற்காக 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமிக்கு அரசு பஸ்களில் வரும் பக்தர்களின் வசதிக்காக 9 தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவத்துக் கழகம் சார்பாக 2,800 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் சூடம் ஏற்றுவதற்கும், மலை ஏறுவதற்கும் தடை செய்யப்படுகிறது.


வனத்துறை மூலமாக மலையில் உள்ள விலங்குகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தேவையான தண்ணீர் நிரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் பல்வேறு மார்க்கங்களில் இருந்து 14 ரெயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.


வேளாண்மைத் துறை மூலமாக திருவண்ணாமலை வரும் 9 அணுகு சாலைகளிலும், விவசாய நிலங்களில் உள்ள பம்புச்செட்டுகள் உள்ள 42 இடங்களில் இலவசமாக குளிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.


கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் இலவசமாக பக்தர்கள் பயன்படுத்தலாம். மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அன்னதானம் வழங்குவதற்கு 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். இந்த வருடம் தற்காலிக பஸ் நிலையங்களிலும் அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்களுக்கு இடம் தரப்படும்.