குட்கா வழக்கில் ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட் மேல்முறையீடு
குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாகவே தடையை மீறி குட்கா உற்பத்தி செய்யப்பட்டு வருவதும், விற்பனை செய்யப்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சட்டவிரோத குட்கா விற்பனைக்காக அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் கடந்த ஜனவரி 30-ம் தேதி மீண்டும் விசாரனைக்கு வந்தபோது தமிழக அரசு, மாநில உணவு பாதுகாப்பு ஆணையர், மனுதாரர் அன்பழகன் தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இதனை அடுத்து, இன்று குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அலுவலர் சிவக்குமார் மேல்முறையீடு செய்துள்ளார்.