ப்யூட்டி பார்லர்களுக்கு தடை விதித்த தாலிபான்... போராட்டத்தில் இறங்கிய ஆப்கான் பெண்கள்!
நாடு முழுவதும் உள்ள அழகு நிலையங்களை மூட தலிபான்கள் உத்தரவிட்டதை அடுத்து, பல ஆப்கானிஸ்தான் பெண்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி வந்த அன்று முதல் பெண்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகி வருகிறது. முன்பு பெண்களின் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் புல்வெளிகள் உள்ள அல்லது திறந்த வெளியில் உட்காரும் உணவகங்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் புதிய ஆணையை பிறப்பித்தனர். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அழகு நிலையங்களை மூட தலிபான்கள் உத்தரவிட்டதை அடுத்து, பல ஆப்கானிஸ்தான் பெண்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது பாதுகாப்புப் படையினர் தண்ணீர் பீரங்கிகளை பயண்படுத்தியதோடு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கலைந்து செல்ல வேண்டும் என மிரட்டினர்.
பெண் தொழில்முனைவோருக்கு ஏற்படும் பாதிப்பு
தலிபான்கள் இந்த மாத தொடக்கத்தில், உத்தரவு ஒன்றை பிறப்பித்து ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து சலூன்களையும் தங்கள் வணிகங்களையும் கடைகளையும் மூடுவதற்கு ஒரு மாத கால அவகாசம் தருவதாகக் கூறியுள்ளனர். இந்த உத்தரவு பெண் தொழில்முனைவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சர்வதேச அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சலூனை மூடுவதற்கு தலிபான்கள் வினோதமான வாதத்தை முன்வைத்தனர். ப்யூட்டி பார்லர்கள், இஸ்லாம் தடைசெய்த சேவைகளை வழங்குவதாகவும், திருமண விழாக்களில் மணமகன் குடும்பங்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுவதால் தாங்கள் சலூன்களை சட்டவிரோதமாக்குவதாக தலிபான்கள் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தான் பெண்கள்
ப்யூட்டி பார்லர்களை மூடுவது குறித்த உத்தரவை தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பிறப்பித்திருந்தார். ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி மீதா தடை, பொது இடங்கள் மற்றும் பெரும்பாலான வேலைகளில் நீடிக்க தடை, ஹோட்டல்களுக்கு செல்ல தடை ஆகியவற்றை தொடர்ந்து அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பறிக்கும் சமீபத்திய தடையாகும் இது.
தலைநகர் காபூலில் நடந்த போராட்டங்கள்
தலிபான் உத்தரவுகளுக்கு எதிரான பொதுமக்கள் எதிர்ப்பின் ஒரு அரிய அடையாளமாக, தலைநகர் காபூலில் டஜன் கணக்கான அழகுக்கலை கலைஞர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்கள் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தன்னை பர்சானா என அடையாளப்படுத்திய போராட்டக்காரர் ஒருவர், 'நாங்கள் நியாயத்திற்காக இங்கு வந்துள்ளோம். நாங்கள் வேலை, உணவு மற்றும் சுதந்திரத்தை விரும்புகிறோம்.
மேலும் படிக்க | பொது இடங்களில் மரண தண்டனை, கசையடி... தாலிபானை கண்டித்துள்ள ஐநா!
தலிபான்கள் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீரங்கிகளை பிரயோகித்ததோடு, அவர்களை கலைக்க தங்கள் துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி சுட்டனர். பெண்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா பணிக்கு செல்வதாக ஃபர்சானா பின்னர் கூறினார். போராட்டக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முடிவை மறுபரிசீலனை செய்: ஆப்கான் பெண்கள்
பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு பெண் கூறுகையில், “எங்கள் போராட்டத்தின் நோக்கம் அவர்களை (தலிபான்கள்) மறுபரிசீலனை செய்து, அழகு நிலையத்தை மூடும் முடிவை மாற்றியமைப்பதாகும், ஏனெனில் இது எங்கள் வாழ்க்கையைப் பற்றியது. இதில் 50 முதல் 60 பெண்கள் கலந்து கொண்டோம். வேலை, உணவு மற்றும் சுதந்திரம் என்பதே எங்கள் முழக்கம். எனினும், போராட்டங்கள் குறித்து தலிபான் அரசாங்கத்தில் உள்ள எவரிடமிருந்தும் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பெண் கல்விக்கு தடை
தலிபான் ஆட்சியில் பெண்களின் கல்வி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உயர்கல்வி நிறுவனங்களில் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பெண்கள் அமர அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக, பெண்கள் பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், ஊடகங்களில் பெண்கள் பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்தடை மாத்திரை விற்க தடை
முன்னதாக இஸ்லாமிய மக்கள் தொகையை தடுக்க கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதாக தலிபான்கள் நம்பும் நிலையில், இதைப் பயன்படுத்தக் கூடாத்யு என்று வீடு வீடாகச் சென்று மக்களைக் கேட்டுக் கொண்டதோடு, கடைக்காரர்கள் கருத்தடை மாத்திரைகளையும் பொருட்களையும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பெண்கள் ஹோட்டலுக்கு செல்லக் கூடாது... தொடரும் தாலிபான் அட்டூழியங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ