அமெரிக்க அரசியலில் ஏ.ஆர். ரஹ்மான்... கமலா ஹாரிஸிற்கு ஆதரவு - என்ன செய்தார் தெரியுமா?
AR Rahman: அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அவருக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 30 நிமிட இசை நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளார்.
AR Rahman Performance Video For Kamala Harris: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். டொனால்ட் டிரம்ப் கடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தாலும் இரண்டாவது முறையாக அதிபர் பதவியை கைப்பற்ற பரபரப்பான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
மறுபுறம் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக தேர்வாக கடுமையாக போராடி வருகிறார் எனலாம். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இந்த தேர்தலில் முதலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனே போட்டியிடுவதாக இருந்தது. இருப்பினும், சில காரணங்களுக்காக ஜோ பைடன் போட்டியில் இருந்து விலக, அவரே கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராகவும் முன்மொழிந்தார். ஜோ பைடன் மட்டுமின்றி முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கமலா ஹாரிஸிற்கு தனது ஆதரவு என அறிவித்திருந்தார்.
30 நிமிட இசை நிகழ்ச்சி
இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாள்களே அதிபர் தேர்தலுக்கு இருப்பதால் உலகமே இதன் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது எனலாம். காரணம் உலக வல்லரசுகளில் அமெரிக்கா முக்கியமான நாடாகும். எனவே, புவிசார் அரசியலில் அமெரிக்காவின் அதிபர் தேர்தலும் உற்று கவனிக்கப்படும். யார் அதிபராக வருகிறார்கள், வெளியுறவு கொள்கைகள், உலக அரசியலில் அவர்கள் என்னென்ன நிலைபாடுகளை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமானோரிடம் எழும்.
மேலும் படிக்க | கமலா ஹாரிஸ் வெற்றி பெற... பேனர் வைத்த திமுக நிர்வாகி - ஊர் மக்களின் 'பெரிய கோரிக்கை'
இந்நிலையில் உலகளவில் பல்வேறு பிரபலங்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரில் ஒருவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வரும் வேளையில், ஆஸ்கார் விருது வென்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக 30 நிமிடங்கள் அடங்கிய பதிவுசெய்யப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமலா ஹாரிஸிற்கு ஆதரவு
AAPI Victory Fund என்றழைக்கப்படும் ஆசிய அமெரிக்கன் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் வெற்றி நிதி அமைப்பு, கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக செயலாற்றி வருகிறது. இந்த அறக்கட்டளையே ஏ.ஆர். ரஹ்மான் கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக இந் 30 நிமிட இசை நிகிழ்ச்சியை தயாரித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இது வெறும் இசை நிகழ்ச்சியாக மட்டுமின்றி அதையும் தாண்டிய ஒன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி குறித்து இந்த அமைப்பின் தலைவர் சேகர் நரசிம்மன் கூறுகையில்,"இந்த நிகழ்ச்சியின் மூலம், அமெரிக்காவில் முன்னேற்றம் மற்றும் பிரதிநிதித்துவத்திற்காக நிற்கும் தலைவர்கள் மற்றும் கலைஞர்களோடு, ஏஆர் ரஹ்மான் தனது குரலையும் பதிவு செய்துள்ளார் எனலாம். அமெரிக்காவில் இது நமது சமூகங்கள் நாம் பார்க்க விரும்பும் எதிர்காலம் குறித்து களத்தில் ஈடுபடவும் வாக்களிக்கச் செய்யும் நடவடிக்கைக்கான அழைப்பாகும்" என்றார்.
ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியை எதில் பார்க்கலாம்?
இந்த முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட 30 நிமிட நிகழ்ச்சி AAPI Victory Fund யூ-ட்யூப் சேனலில் அமெரிக்க நேரப்படி அக்டோபர் 13ஆம் தேதி இரவு 8 மணிக்கு (அதாவது, இந்திய நேரப்படி அக்டோபர் 14ஆம் தேதி காலை 5:30 மணிக்கு) ஒளிபரப்பப்படும். இது AVS மற்றும் TV Asia போன்ற முக்கிய தெற்காசிய தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்படும்.
30 நிமிட நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானின் மிகவும் பிரபலமான சில பாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. கமலா ஹாரிஸ் குறித்தும் மற்றும் AAPI சமூகத்திற்கான அவரது அர்ப்பணிப்பு குறித்தும் இந்த நிகழ்ச்சியில் சில தகவல்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஹ்மான் மற்றும் இந்தியாஸ்போரா நிறுவனர் எம்.ஆர்.ரங்கசாமி ஆகியோர் அடங்கிய டீஸர் வீடியோ ஏற்கனவே யூ-ட்யூப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஒபாமா கொடுத்த ஒற்றை குரல்... கமலா ஹாரிஸிற்கு பிரகாசமாகும் வெற்றி வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ