கமலா ஹாரிஸ் வெற்றி பெற... பேனர் வைத்த திமுக நிர்வாகி - ஊர் மக்களின் 'பெரிய கோரிக்கை'

Kamala Harris: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என தமிழகத்தின் திருவாரூரில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் மக்கள் வழிபாடு மேற்கொண்டனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jul 24, 2024, 12:06 PM IST
  • கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முன்மொழியப்பட்டார்.
  • கமலா ஹாரிஸ் தாத்தா கோபாலன் திரூவாரூரைச் சேர்ந்தவர்.
  • கமலா ஹாரிஸ் தற்போது துணை அதிபராக உள்ளார்.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற... பேனர் வைத்த திமுக நிர்வாகி - ஊர் மக்களின் 'பெரிய கோரிக்கை' title=

Kamala Harris Tamil Nadu Latest News: அமெரிக்காவின் தற்போதைய அதிபரும், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருந்த ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக சில நாள்களுக்கு முன் அறிவித்தார். அதுமட்டுமின்றி, துணை அதிபரான கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முன்மொழிந்தார். 

ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டிலேயே அக்கட்சியின் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் எனலாம். இருப்பினும், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாகவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை, கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால் அவர்தான் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக பொறுப்பேற்பார் எனலாம். நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் (US Presidential Election 2024) நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

பூர்வீகம் தமிழ்நாடு
 
இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வெற்றி பெற வேண்டி மன்னார்குடி அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள் தர்ம சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  

கமலா ஹாரிஸ் தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமம் பூர்வீகமாக கொண்டவர். கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். கமலா ஹாரிஸ் தாத்தா கோபாலன் இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணியில் 1930ஆம் ஆண்டு பணியாற்றியவர். அப்போது ஜமைக்கா நாட்டிற்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக இந்திய அரசு கோபாலனை அனுப்பி உள்ளது.

மேலும் படிக்க | தமிழ், தமிழ்நாடு என ஒரு வார்த்தைகூட இடம்பெறாத மத்திய பட்ஜெட் - திட்டமிட்ட புறக்கணிப்பா?

குலதெய்வ கோயிலுக்கு நன்கொடை

அமெரிக்காவில் பி.வி.கோபாலன் குடும்பம் குடியேறியது. இவரது இரண்டாவது மகள் சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர்தான் கமலா ஹாரீஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, கலிபோர்னியாவின் முதல் பெண் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். 

அரசியலில் வளர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்ற போது துணை அதிபராக போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். 

மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலா ஹாரிஸ் பல ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விவரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி சார்பில்
அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என கிராமமக்கள் தர்ம சாஸ்தா கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

ஊர்மக்களின் வழிபாடு

மன்னார்குடி அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக உள்ளது எங்கள் ஊருக்கு பெருமையாக உள்ளது. அதேபோல அமெரிக்கா அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில் அவர் வெற்றி பெற வேண்டி சாஸ்தா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தோம்" என அவ்வூரைச் சேர்ந்த அசோகன் தெரிவித்தார். 

மேலும், அதே ஊரை சேர்ந்த பரிமளா என்பவர் கூறுகையில்,"கமலா ஹாரிஸ் உடைய தாத்தா ஊர் துளசேந்திரபுத்தைச் சேர்ந்தவர். ஆனால், கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். சில வருடங்களுக்கு முன்புதான் அவருக்கும் ஊருக்கும் உள்ள தொடர்பு எல்லாருக்கும் தெரியவந்தது. அவர் வெற்றி பெற குலதெய்வத்தை வேண்டிக்கொள்கிறேன்" என்றார். 

கமலா ஹாரிஸுக்கு வேண்டுகோள்

மேலும் அந்த தர்ம சாஸ்தா கோயிலின் அர்ச்சகர் நடராஜன் கூறுகையில்,"துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கோபாலனின் பேத்தி கமலா ஹாரிஸ் துணை அதிபராக உள்ளார். அவர் அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற துளசேந்திரபுரம் கிராம மக்கள் மட்டுமின்றி பக்கத்து கிராம மக்களும் இந்த கோவிலுக்கு வந்து 
 வேண்டிக்கொள்கிறார்கள். அவர் வெற்றி பெற்று அதிபராக இந்த கிராமத்திற்கு ஒரு முறை வரவேண்டும் என்பது அவருக்கு எங்களது வேண்டுகோள்" ஆகும் என்றார். 

மேலும், துளசேந்திரபுரம் திமுக நிர்வாகியான அருள்மொழி சுதாகர் என்பவர் அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொள்வதாக தெரிவித்து அந்த கோயிலுக்கு வெளியே பேனர் ஒன்றை வைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | டிரம்ப் உயிரை காத்தது கடவுள் ஜெகந்நாதர்... சொல்வது இஸ்கான்! - 48 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News