கணினி பழுது காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்களை பிரிட்டீஷ் ஏர்வேஸ் ரத்து செய்ததால் ஹீத்ரோ, காட்விக் விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிட்டனில் உள்ள ஹீத்ரோ மற்றும் காட்விக் விமான நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடியது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் புறப்பட்டுச் செல்வதோடு, நூற்றக்கணக்கான விமானங்கள் வருவதும் உண்டு. இதனால் எப்போதும் பயணிகள் அதிக அளவிலேயே காணப்படுவார்கள்.


ஹீத்ரோ விமான நிலையத்தை பொறுத்தவரையில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்நிலையில் இன்று திடீரென கணினி பழுது ஏற்பட்டதாக இரண்டு விமான நிலையங்களில் இருந்தும் புறப்பட வேண்டிய 100-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது பிரிட்டீஷ் ஏர்வேஸ். 


முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் இரண்டு விமான நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் தேங்கி தவித்தனர். விமான ரத்தால் பயணம் செய்ய முடியாத பயணிகள் 8-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து இரண்டு விமான நிலையத்திற்கும், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், பிலேடெல்பியா, பிட்ஸ்பர்க், சார்லோட், நஷ்வில், மற்றும் மியாமியில் இருந்து வரவேண்டிய  விமானங்கள் நீண்ட காலதாமத்திற்குப் பிறகு தரையிறங்கின.


கடந்த 2017-ம் ஆண்டும் இதேபோன்று கணினி இணைப்பு சிஸ்டம் தோல்வியால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 75 ஆயிரம் பயணிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.