கோர்ட்டு உத்தரவை எதிர்த்து டிரம்ப் தரப்பு மேல் முறையீடு
ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சூடான், சோமாலியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
வாஷிங்டன்: ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சூடான், சோமாலியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்தார்.
மேலும் சிரியா அகதிகள் நுழைய நிரந்தர தடை விதித்தார். இது அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்காவில் கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட பல மாகாணங்களில் உள்ள கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வழக்கை விசாரித்த கோர்ட்டு டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் இடைக்கால தடை விதித்தது. இதை டிரம்ப் நிராகரித்தார்.
இதற்கிடையே, மத்திய கோர்ட்டின் தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசின் நீதித்துறை மேல்கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. மேலும் அதிபர் டொனால்டு டிரம்ப், உள்துறை ஜான் கெல்லி, வெளியுறவு துறை மந்திரி ரெஸ் டில்லர்சன் ஆகியோரும் சியாட்டில் மத்திய கோர்ட்டு தடை உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவின் பாதுகாப்புக்காகத்தான் ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசர வழக்காக விசாரித்து தடையை உடனே நீக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.