எகிப்து ரயில் விபத்து: 44 பேர் பலி, 180 பேர் காயம்; இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
எகிப்தின் கடலோர நகரமான அலெக்ஸாண்ட்ரியாவுக்கு அருகே இரண்டு ரயில்கள் மோதியதால், இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர். 180 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தற்போது மீட்புப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் முழு வீச்சில் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப் படுகின்றனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், இரண்டு ரயில்களின் குப்பைகள் அகற்றப்பட்ட பிறகு இறப்பை குறித்து இறுதி எண்ணிக்கை அறிவிக்கப்படும் என எகிப்திய அமைச்சரவை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளன.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த இமாம் ஹாடி (வயது26) என்ற பெண், அலெக்ஸாண்ட்ரியாவுக்கு செல்லும் ரயிலில் பயணித்ததாகவும், அது ஏற்கனவே மோசமான நிலையில் இருந்ததாகவும் கூறினார். இந்த விபத்தில் உயிர் பிழைத்த 10 வயதான கரீம் அப்தல் வஹாப், எனது தாயாரும், எனது சகோதரரும் இந்த ரயிலில் என்னுடன் பயணித்தனர். ஆனால் அவர்களை இதுவரை என்னால் காண முடியவில்லை என்று கூறியுள்ளார்.
விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எகிப்தில் 2002-ல் ஏழு ரயில் வண்டிகள் மோதியதில் குறைந்தபட்சம் 360 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.