2016ம் ஆண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டின் பங்குத் தொகையாக 200 மில்லியன் அமெரிக்க டாலர் அளித்துள்ளது அந்த நிறுவனம். இந்த தொகை அவர் 2015-ம் ஆண்டு பெற்றத் தொகையை விட இரண்டு மடங்காகும்.
தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றார். 2016-ம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 6,50,000 அமெரிக்க டாலர் அவர் பெற்றுள்ளார்.
சுந்தர் பிச்சை சிஇஓ-வாக பதவியேற்ற பிறகு கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய அறிமுகங்களை புகுத்தினார். யூடியூப்பில் விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயை அதிகப்படுத்தியிருந்தார்.
மேலும் 2016-ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் போன்கள், விர்சுவல் ரியாலிட்டி ஹைட்போன், ரவுட்டர், குரல்களை கட்டுப்படுத்தும் ஒலிப்பெருக்கி போன்றவற்றை அறிமுகம் செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் ஹார்டுவேர் உள்ளிட்ட சேவைகளில் மட்டும் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளது. இந்த வருமானம் கூகுளின் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகமாகும்.
2015-ம் ஆண்டில் அவர் பங்குத் தொகையாக 99 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றிருந்தார். அதனை ஒப்பிடும் போது இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றுள்ளார். சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் வழங்கிய 2016-ம் ஆண்டுக்கான பங்குத் தொகையின் மதிப்பை நீங்கள் இந்திய ரூபாயில் கணக்கிட்டால் உங்களுக்குத் தலை சுற்றல் வரலாம்... இந்திய ரூபாயின் மதிப்புக்கு 1,265 கோடி ரூபாய் அவர் கடந்த ஆண்டுக்கான ஊதியமாக பெற்றுள்ளார்.