மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கழுத்தில் கத்திக்குத்து
மெல்போர்னில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த பாதிரியார் கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், அனக்கம்போயில் பகுதியைச் சேர்ந்தவர் டோமி களத்தூர் மேத்தீவ் (48). இவர் மெல்போர்ன் புறநகர் பகுதியில்உள்ள
தேவாலயத்தில் 2014-ம் ஆண்டு முதல் பாதிரியாராக இருந்து வருகிறார். நேற்று ஞாயிற்றுகிழமை நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில், மேத்தீவ் மத போதனையில் ஈடுபட்டார். இத்தாலி மொழியில் அவர் போதனை செய்ய துவங்கியதும், கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர், கூச்சலிட்டபடி, கத்தியால் மாத்தீவின் கழுத்தை அறுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஆஸி., பத்திரிகைகள் கூறுகையில், தாக்குதல் நடத்திய நபர் மேத்தீவை நோக்கி, ‛இந்தியாவை சேர்ந்த நீ இந்துவா அல்லது இஸ்லாமியனா. உன்னால் பிரார்த்தனை கூட்டத்தை நடத்த முடியாது. அப்படி நீ போதனை செய்தால் உன்னை கொல்லுவேன் என எச்சரித்துள்ளான். ஆனால் மாத்தீவ் அதனை பொருட்படுத்தாததால் தொடர்ந்து பிரார்த்தனை நடத்தினார். அனல் அவன் கத்தியுடன் வந்து பலரின் முன்னிலையில் மேத்தீவின் கழுத்தை அறுத்துள்ளான்.
உடனடியாக மேத்தீவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் தடிமனான உடை அணிந்திருந்ததால் காயம் ஆழமாக ஏற்படவில்லை. இதனால் மேத்தீவ் உயிர் பிழைத்துள்ளார்.
அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.