புதுடெல்லி: கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் வளைகுடாவை விட்டு வெளியேறிய இந்தியர்கள் மீண்டும் வேலைக்காக அங்கே செல்லத் தொடங்கியுள்ளனர். FICCIயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (MEA) செயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா, 50,000 இந்தியர்கள் ஏற்கனவே வளைகுடா நாடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"வளைகுடா பிராந்தியத்திற்கு இந்திய தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் திரும்பும் போக்குத் தொடங்கியது ஒரு நல்ல அறிகுறியாகும். சுகாதாரம், தரவு மேலாண்மை, எண்ணெய் மற்றும் கட்டுமானத் துறைகள் மற்றும் விளையாட்டுத் துறை சேர்ந்த பணியாளர்களும் வளைகுடா நாடுகளுக்குத் திரும்புகின்றனர். எனவே, வெளிநாட்டில் பணியாளர்களுக்கான   எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது" என்றும் அவர் கூறினார்.


கொரோனா பரவத் தொடங்கிய பிறகு, இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து தாயகம் அழைத்து வர இந்தியா தொடங்கிய மிகப்பெரிய வந்தே பாரத் திட்டத்தின் கீழ், அதிகபட்ச எண்ணிக்கையிலான இந்தியர்கள் வளைகுடா மற்றும் அரபு பிராந்தியத்திலிருந்து திரும்பி வந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 4,57,596 இந்தியர்கள், செளதி அரேபியாவிலிருந்து 1,63,851, கத்தார் நாட்டிலிருந்து 1,04,444, ஓமனில் இருந்து 85,498, குவைத்திலிருந்து 90,759 இந்தியர்கள் தாயகம் திரும்பி வந்தனர்.


Also Read | China hackers இந்திய அரசின் வலைத்தளங்களை குறிவைக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் கவலை


அரபு உலகில் பணியாற்றும் வெளிநாட்டினரில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.   ஒன்பது மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அங்கு பணி புரிகின்றனர். இது அங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் 30 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. வளைகுடா நாடுகளில் இருந்து சுமார் 48 பில்லியன் டாலர்களை அங்கு பணிபுரியும் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புகிறார்கள்.  


தொற்றுநோய்க் காலத்தில் கூட செளதி அரேபியாவிற்கு ஆயிரக்கணக்கான சுகாதார நிபுணர்களையும், கோவிட் -19 சவாலை எதிர்கொள்ள உதவும் வகையில் குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு நூற்றுக்கணக்கான சுகாதார நிபுணர்களையும் இந்தியா வழங்க முடிந்தது என்பதை இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் பட்டாச்சார்யா சுட்டிகாட்டினார்.
"இந்தியா பல அரபு நாடுகளுக்கு அவசர மருத்துவ பொருட்களை வழங்கியது, COVID-19க்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது" என்று அவர் தெரிவித்தார். மேலும், "தடுப்பூசி தயாரானவுடன்" இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி கொடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறைச் செயலாளர் உறுதியளித்தார்.


இந்தியாவைப் பொறுத்தவரை, அரபு உலகத்துடனான அதன் உறவுகளில் எரிசக்தி பாதுகாப்பு ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியில் 53 சதவீதத்தையும், 41 சதவீத எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறது.  இராக், சிரியா, லிபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலும் இந்தியாவின் வர்த்தகம் கணிசமான அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.