Israel Announced Hassan Nasrallah Death: இஸ்ரேல் நாட்டுக்கும், லெபனான் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவுக்கும் கடந்த 11 மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. கடந்த சில நாள்களாக இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், தொடர்ந்து வான்வழியாக லெபனான் நாடு மீது குண்டுகளை பொழிந்து வருகிறது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், நேற்று லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகம் மீது இஸ்ரேல் ராணுவம் தொடுத்த வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா குழுவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் வீழ்த்தப்பட்டு உயிரிழந்தார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு பெய்ரூட்டின் தஹியே என்ற பகுதியில் உள்ள தலைமையிடத்தில் ஹிஸ்புல்லா குழுவின் தலைவர்கள் பலரும் கூட்டம் நடத்தி வந்தனர். அந்த நேரத்தில் Operation New Order என்ற பெயரில் இஸ்ரேல் விமானப்படையின் ஜெட்கள் வான்வழி தாக்குதல் மேற்கொண்டதாகவும், அந்த தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லாஹ் பலியானார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு


இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் அதன் X பக்கத்தில்,"உலகை மேலும் அச்சுறுத்த ஹசன் நஸ்ரல்லாஹ் தற்போது உயிரோடு இல்லை" என பதிவிட்டுள்ளது. இஸ்ரேல் தொடர்ந்து ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுக்களின் தலைவர்களை தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத குழுவின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா குழுவின் உயர்மட்ட தளபதி ஃபுவாட் ஷூக்ர் ஆகியோர் கடந்த ஜூலை மாதத்தில் இஸ்ரேல் ராணுவத்தால் வீழ்த்தப்பட்டனர். 



நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தெற்கு முன்னணி படையின் தளபதி அலி கார்கி மற்றும் கூடுதல் தளபதிகள் வீழ்த்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தொடர் வான்வெளி தாக்குதலில் லெபனான் நாடே உருக்குலைந்து போயுள்ளது. பெய்ரூட்டில் இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மகளும், ஹிஸ்புல்லா குழுவின் பொது செயலாளருமான ஜைனப் நஸ்ரல்லாஹ்வு்ம கொல்லப்பட்டார் என செய்திகள் வெளியாகின. இருப்பினும் இஸ்ரேல் தரப்பிலோ, லெபனான் தரப்பில் இன்னும் ஜைனப் மறைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.


ஹசன் நஸ்ரல்லாஹ்வின் உயிரிழப்பை ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதிப்படுத்தி உள்ளது. ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், நஸ்ரல்லாஹ் மற்ற தியாகிகளுடன் கலந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சி சேனலான Al-Manar குரான் வசனங்களை ஒளிப்பரப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம்... கேரள நபருக்கு தொடர்பு? - யார் இந்த ரின்சன் ஜோஸ்?


நேற்றைய தாக்குதலில் 6 பேர் பலி 


ஹிஸ்புல்லாவின் தலைமையகத்தில் நேற்று நடந்த தாக்குதலில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுகள் பொழியப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு குண்டுகளும் ஒரு டன் வெடிபொருட்களை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று நடந்த இந்த வான்வழித் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 91 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதில் ஹசன் நஸ்ரல்லாஹ் குறித்து குறிப்பிடவில்லை. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. 


யார் இந்த ஹசன் நஸ்ரல்லாஹ்?


ஹிஸ்புல்லா குழுவின் தலைவராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹசன் நஸ்ரல்லாஹ் இருந்துள்ளார். அவர் கடந்த 1992ஆம் ஆண்டு அவரது 32ஆவது வயதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஹிஸ்புல்லா குழுவுக்கு ஈரான் நாட்டின் ஆதரவு இருந்தது. இஸ்ரேல் அரசால் இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக இவர் பல ஆண்டுகளாக பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்து தொடர்ந்து தலைமறைவு வாழ்வை மேற்கொண்டு வந்தார். 


மேலும் படிக்க | மெகா சுனாமி எத்தனை நாள் நீடிக்கும்? 9 நாட்கள் நீடித்த மிகவும் நீள.....மான சுனாமி ராட்சத அலைகள்...


ஹசன் நஸ்ரல்லாஹ் ஒரு காய்கறி விற்பனையாளரின் மகன் ஆவார். 1960ஆம் ஆண்டில் பெய்ரூட்டின் கிழக்குப் பகுதியான போர்ஜ் ஹம்மௌடில் இவர் பிறந்தார். இவரது பெற்றோருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். அதில் மூத்தவர்தான் ஹசன் நஸ்ரல்லாஹ்.


ஹிஸ்புல்லா உருவான வரலாறு


லெபனானை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய படைக்கு எதிராக நிறுவப்பட்ட ஒரு போராளிக்குழு தான் ஹிஸ்புல்லா. நஸ்ரல்லாஹ்வின் தலைமையின் கீழ் ஹிஸ்புல்லா குழு லெபனான் நாட்டின் ராணுவதை விட வலிமைமிக்கதாக உருவெடுத்தது. நஸ்ரல்லாஹ் 1975ஆம் ஆண்டில் ஷியா போராளிக் குழுவான அமல் இயக்கத்தில் இணைந்தார். ஏழு வருடங்களுக்கு பின் நஸ்ரல்லாஹ்வும் இன்னும் சில உறுப்பினர்களும் அந்த குழுவில் இருந்து வெளியேறி இஸ்லாமிக் அமல் என்ற மற்றொரு அமைப்பை தொடங்கினர். அதாவது, 1982ஆம் ஆண்டில் பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தது, இதைத் தொடர்ந்தே இந்த இஸ்லாமிக் அமல் அமைப்பு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


ஈரானின் புரட்சியாளர்களிடம் இருந்து கணிசமான இராணுவ மற்றும் நிறுவன ஆதரவைப் பெற்று ஹிஸ்புல்லா அமைப்பு பின்னர் உருவானது. குறுகிய காலத்திலேயே ஹிஸ்புல்லா, ஷியாவின் முக்கிய போராளிக் குழுவாக உருவெடுத்தது. ஹிஸ்புல்லா குழு அதிகாரப்பூர்வமாக 1985ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. தோற்றுவிக்கப்பட்ட உடன், இஸ்லாமியர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலை 'அழிக்க' அழைப்பு விடுப்பதாக ஹிஸ்புல்லா குழு பொதுவெளியில் கடிதத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.


தலைமைக்கு வந்த ஹசன் நஸ்ரல்லாஹ்...


தொடர்ந்து, 1992ஆம் ஆண்டில் இஸ்ரேல் ஹெலிகாப்டர் மூலம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி கொல்லப்பட்டார். உடனே அந்த தலைவர் பதவிக்கு அப்போது 32 வயதான ஹசன் நஸ்ரல்லாஹ் வந்தார். இவர் தலைவராக வந்ததை உலகிற்கு அறிவிக்கும் விதமாக இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ராக்கெட் தாக்குதலை மேற்கொண்டார். மேலும், துருக்கி மற்றும் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் ஆகியவற்றில் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் தொடுத்தார். அர்ஜென்டினாவில் நடந்த தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். 


ஹசன் நஸ்ரல்லாஹ் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் முதல்முறையில்லை. இவரை கொல்ல இஸ்ரேல் ராணுவம் பலமுறை தாக்குதல் தொடுத்துள்ளது. நஸ்ரல்லாஹவின் வீடு மற்றும் அலுவலகங்கள் தாக்கப்பட்டு தகர்க்கப்பட்டன. ஆனால், நஸ்ரல்லாஹ் அவற்றில் இருந்து உயிர் தப்பித்தார். அதன்பின் அவர் பொதுவெளிக்கு வரவே இல்லை. இவர் நிலத்தடி பதுங்கு குழிகளில்தான் தொடர்ந்து தனது கூட்டங்களை மேற்கொண்டு வந்தார். 


மேலும் படிக்க | இலங்கை அதிபரானார் மார்க்சிஸ்ட் தலைவர்... யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ