மீண்டும் ஜப்பானை அச்சுறுத்திய வடகொரியா!
ஐக்கிய நாடுகளின் கடும் எச்சரிக்கையை மீறி ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையும் கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை.
வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது. எனினும், வட கொரியா, தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது. அந்த ஏவுகணை வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிலிருந்து கிழக்கு நோக்கி ஜப்பான் வான் எல்லை வழியே பாய்ந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. அந்த ஏவுகணை 770 கிலோமீட்டர் உயரத்தில், 3,700 கிலோமீட்டர் தூரம் பயணித்து கடலில் விழுந்ததாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணையை வீசியதற்கு ஜப்பான் பிரதமர் அபே கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அத்துமீறிய நடவடிக்கைகளை ஜப்பான் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என கூறியுள்ளார்.