புளோரிடா சம்பவம்: அதிபர் ஒபாமா கடும் கண்டனம்
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் `பல்ஸ்` என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு கேளிக்கை விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 53 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர் அதிரடிக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த நபர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 53 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஒபாமா பேசியது:- வெறுக்கத்தக்க இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலாகும் ஆனாலும், தாக்குதலுக்கு என்ன காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. அமெரிக்க வரலாற்றில் கொடூரமான சம்பவம் இன்று நடந்திருக்கிறது. அரசு சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும். ஓரினசேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்களுக்கு இது நெஞ்சை உடைக்கும் நாள். இந்த துப்பாக்கிச்சூடு அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தாக்குதல்" என்று தெரிவித்தார்.