சீன அதிபரை சந்திப்பாரா பிரதமர் மோடி ? - 2019 தாக்குதலுக்கு பின் முதல்முறையாக...
உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட எட்டு நாடுகள் இன்று பங்கேற்கின்றன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப். 15) மாலை விமானம் மூலம் அங்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டின் தலைவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, பின்னர் மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த தனிப்பட்ட கூட்டத்திலும் கலந்துகொண்டார். இன்று (செப். 16) மதிய உணவிற்கு பிறகு, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கட் மிர்சியோயேவ், ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி ஆகியோருடன் இரு தரப்பு பேச்சுவாரத்தை மேற்கொள்கிறார். இந்த மூன்று சந்திப்புகளை தவிர வேறு எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை.
ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பின்போது, வணிகம் குறித்தும், உலக அரசியல் குறித்தும் பிரதமர் மோடி பேச உள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் - ரஷ்ய போருக்கு முன், எண்ணெய்யை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அரிதாகவே வாங்கிவந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு, ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பீப்பாய்களை வாங்கிவந்த இந்தியா, தற்போது ஒரு நாளைக்கு 7 லட்சத்து 57 ஆயிரம் பீப்பாய்களை இறக்குமதி செய்கிறது.
"ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள், அமைப்பின் விரிவாக்கம், அமைப்புக்குள் பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் பலமாக்குதல் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள நான் எதிர்நோக்கி இருக்கிறேன்" என பயணத்திற்கு முன்னர் தனது ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
கல்வான் தாக்குதலுக்கு பின்
உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்."2018ஆம் ஆண்டு அவர் இந்தியாவிற்கு வருகை தந்ததை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். மேலும், 2019ஆம் ஆண்டு குஜராத் உச்சிமாநாட்டில் கெளரவ விருந்தினராக கலந்துகொண்டார். இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் சில தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த உச்சிமாநாட்டில் சீன அதிபரும் பங்கேற்க உள்ள நிலையில், பிரதமர் மோடி - சீன அதிபர் உடனான சந்திப்பு இதுவரை திட்டமிடப்படவில்லை. 2019ஆம் ஆண்டு, சீனா இந்தியாவின் லடாக்கின் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பின், இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டு அமர்வுகளுடன் உச்சிமாநாடு
இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், உறுப்பினர்களாக உள்ள எட்டு நாடுகளும் கலந்துகொண்டுள்ளன. அவர்கள், ரஷ்ய - உக்ரைன் போரால் உச்சமடைந்து வரும் உலக அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தைவான் மீதான சீனாவில் ராணுவ ஆதிக்கம் குறித்தும் பேசுவார்த்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாடு இரண்டு அமர்வுகளாக நடத்தப்படுகிறது. ஒரு அமர்வு, தலைவர்களுக்கான தனிப்பட்ட கூட்டமாகவும், மற்றொரு அமர்வில் பார்வையாளர்கள் பங்கேற்புடனும் நடைபெறும்.
2001ஆம் ஆண்டு, ஜூன் மாதம் ஷாங்காய் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் இந்த அமைப்பை தொடங்கின. தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முழுநேர உறுப்பினராக இந்த அமைப்பில் இணைந்துக்கொண்டனர். கரோனா தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாடு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தமிழுக்கு இந்தி எதிரியா... என்ன சொல்கிறார் அமித் ஷா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ