அதிபரின் அதிகாரம் பறிப்பு... ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் - சரிவில் இருந்து மீளுமா இலங்கை?
இலங்கையில் ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டு, இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
பற்றி எரியும் இலங்கை:
இலங்கையில் தொடர்ந்து நீடிக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வீரியமைடைந்து வருகிறது. நிலைமை கையை மீறி சென்றதால் கடந்த 9-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே விலகினார். இதனால் அதிருப்தியடைந்த மஹிந்த ஆதரவாளர்கள் அமைதி வழியில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்த அது அவர்கள் மீதே பூமராங்காக திரும்பியது.
நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ஒன்றுகூடி ஆளும் கட்சியினர் மீது தாக்குதலை தொடங்கினர். மஹிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு, நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்சேவின் வீடு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் வீடுகள் எரிந்து சாம்பலாகின. தற்போது ஊரடங்கு அமலிலுள்ள நிலையிலும் பொதுமக்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவம் மற்றும் போலீசாருக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கியுள்ள இலங்கை அரசு பொதுசொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுட்டுத்தள்ள அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர்:
இந்த நிலையில் நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை அராஜக நிலைக்கு செல்வதை தடுக்கவும், தற்போதைய அசாதாரண சூழலை கட்டுப்படுத்தவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்று மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய பிரதமரை இந்த வாரத்திற்குள் நியமிப்பேன் என கூறினார். மேலும் ராஜபக்சே குடும்பத்தை சேராத இளைஞர்களின் அமைச்சரவையை கொண்ட புதிய அரசு உருவாகும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
இதனால் ராஜபக்சேக்களுக்கு எதிரான மக்களின் கோபம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமையை சமாளிக்க ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்கும்படி கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். குறைந்த காலத்திற்கேனும் ரணில் பிரதமராக இருக்க வேண்டும் என கோத்தபய கோரியதாகவும் இதனை ரணில் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ரணில் - கோத்தபய இடையே அதிபர் மாளிகையில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு ஆலோசனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க : இலங்கையில் வலுக்கும் நெருக்கடி: ‘உள்ளாடை போராட்டத்தை’ துவக்கிய பொதுமக்கள்
அதிபரின் அதிகாரங்கள் குறைப்பு:
இதனிடையே இன்று காலை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கோத்தபய ராஜபக்சே, நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட அதிபர் முறையை நீக்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். அதாவது அதிபரின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் 19-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் எனவும் கொத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
எனவே மக்களின் உயிர்கள் மற்றும் அவர்களின் உடமைகளை பாதுகாக்கும் வகையில் அரசு இயந்திரம் தடையின்றி இயங்க போராட்டக்காரர்கள் உதவ வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்வதாகவும் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR